‛நீட்' மட்டும் தான் உலகமா? நடிகர் விஜய் சொன்ன கருத்து.. உடனே ஆதரவு தெரிவித்த சீமான்!
மதுரை: ‛‛பயிற்சி எனும் பெயரில் முதலாளிகள் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு தான் நீட் வழியமைத்துள்ளது. நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்'' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு இன்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசு வழங்கி பாராட்டினார். மாமல்லபுரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. முதற்கட்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 20 மாவட்டங்களில் 88 தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசினார். அப்போது அவர்,‛‛என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் எல்லோருக்கும் வணக்கம்.. மை டியர் யங் லீடர்ஸ் என்று பேச்சை தொடங்கினார். தொடர்ந்து, மாணவர்களையும், பெற்றோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பொதுத்தேர்வில் சாதித்த அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து விஜய் பேசும்போது, ‛‛ படிப்பில் சாதிக்க வேண்டும் தான்..அதற்காக ஒரேயொரு தேர்வில் சாதிக்க வேண்டும் என்பது சாதனை அல்ல. ஒரு தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். ஏனென்றால், நீட் தேர்வு மட்டும்தான் உலகமா? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. மனதையும், சிந்தனையையும் தைரியமாகவும், ஜனநாயகனாகவும் வைத்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளில் ஒரு தரப்பினர் ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக அரசு நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசிடம் கூறி வருகிறது. இந்நிலையில் தான்நீட் தேர்வு மட்டும் தான் தேர்வு அல்ல. அதையும் தாண்டி சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது என்று விஜய் கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு பயந்தும், அதில் தோல்வியடைந்தும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் மாணவ-மாணவிகள் மத்தியில் விஜய் இப்படி பேசியுள்ளார். இந்நிலையில் தான் நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் நடிகர் விஜயின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன்பட்டுள்ளார். இதுதொடர்பாக சீமான் மதுரையில் அளித்த பேட்டியில், ‛‛பயிற்சி எனும் பெயரில் முதலாளிகள் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்குதான் நீட் வழியமைத்துள்ளது. நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் மட்டுமே போராடுகிறது'' என்றார்.
அதேபோல் பாமகவில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் பற்றி சீமானிடம் கேட்கப்பட்டது. அதற்கு சீமான்,‛‛ராமதாசுக்கு இவ்வளவு வருத்தம் இருக்கிறது என்பது அவர் பேசுகையில்தான் தெரிகிறது. இருவரும் அமர்ந்து பேசி தீர்க்கும் சூழல் இல்லாததால் பொதுவெளியில் பேசுகின்றனர். ராமதாஸ் மனதில் இருந்ததை கொட்டி விட்டார். இது ஆறும் காயம்'' என்றார்.












Click it and Unblock the Notifications