பல மடங்கு ரிட்டர்ன்.. மதுரை மக்களை ‘மொட்டையடித்த’ நியோமேக்ஸ்.. ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: நிதி நிறுவனம் நடத்திய மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் முன் ஜாமின் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாக கூறி கோடிக் கணக்கில் முதலீட்டைப் பெற்றனர். இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர்.
மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்த நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த ஓராண்டு காலமாகவே புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்த நிறுவனம் பற்றி பொருளாதாரக் குற்றப் பிரிவு தீவிரமாக விசாரித்து வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. நியோமேக்ஸ் மோசடி விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், கமலக்கண்ணன் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இயக்குனர்கள் பழனிசாமி, அசோக் மேத்தா பன்சால், சார்லஸ், தியாகராஜன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள், பாலசுப்ரமணியன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மனு அளித்தனர்.
இந்த வழக்கு கடந்த 10ஆம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது நியோமேக்ஸ் தரப்பில் தங்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, 126 பேர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் எத்தனை பங்குதாரர்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. பொருளாதார குற்றங்களுக்கான நடைமுறையில் சட்டத்தின்படி விசாரிக்க முடியாது என மனுதாரர் சொல்வதை ஏற்க முடியாது. நிதி நிறுவனம் போல தான் நியோமேக்ஸ் செயல்பட்டனர் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் இன்று வழக்கில் தீர்ப்பளித்த மதுரை ஐகோர்ட் கிளை நியோமேக்ஸ் இயக்குநரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications