துணை கலெக்டரின் மகள் நிகிதா.. தனது ஆசிரியரிடம் ரூ.16 லட்சம் சுருட்டல்.. புதிய புகார்களால் பரபரப்பு
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தங்க நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பணமோசடி புகார்கள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு வேலை வாங்கித்தருவதாக தனது ஆசிரியரிடம் ரூ.16 லட்சத்தை வாங்கியதாக நிகிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த அவருடைய உறவினர் தெய்வம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு சென்ற நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி அம்மாள் ஆகியோர், தங்களது காரில் நகை திருட்டு போனதாகவும், காரை பார்க்கிங் செய்து தந்த தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் எடுத்திருக்கலாம் என்று சந்தேகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின்போது அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமார் உடலில் ஏராளமான காயங்கள் உள்ளதால் அவரை, போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார்கள் உள்ளது.இந்த புகாரின் பேரில் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.

நிகிதா மீது புகார்
இந்நிலையில் நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பணமோசடி புகார்களின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அரசு வேலை
அதாவது, 15 ஆண்டுகளுக்கு முன் நிகிதா மற்றும் அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம், பல லட்ச ரூபாயை சுருட்டியவர்கள் என குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபெருமாள்.இவரது மனைவி சிவகாமி அம்மாள். இந்த தம்பதியின் மகள் நிகிதா . இவர்கள் தங்களுக்கு முக்கிய பிரமுகரின் உதவியாளரை தெரியும் என்றும், அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2010-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி சிலரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஆசிரியரிடம் கைவரிசை
2010-ம் ஆண்டு சிலர், அரசு வேலை ஆசையில் ரூ.16 லட்சம் வரை இவர்களிடம் கொடுத்ததாகவும், ஆனால், வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது சம்பந்தப்பட்டவர்களை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2010ம் ஆண்டில் சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
உறவினர் புகார்
இதேபோல் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்தவர்களையும் கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்ததாக நிகிதா குடும்பத்தால் தானும் பாதிக்கப்பட்டதாக திருமங்கலத்தை சேர்ந்த அவருடைய உறவினர் தெய்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
கலெக்டர் ஆபீஸில் புகார்
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மோசடியில் ஈடுபட்ட நிகிதா என் உறவினர் ஆவார். இரண்டு நாளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு ரூ.9 லட்சத்தை அவர் மூலம் அவருடைய குடும்பத்தினர் பெற்றார்கள். இதேபோல் என் உறவினர் வினோத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்காக ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சத்தை கொடுத்து ஏமாந்திருக்கிறோம்.
துணை கலெக்டர் மகள்
பணத்தை திரும்ப கேட்டபோது ஏமாற்றிவிட்டு, எங்களை மிரட்டி அனுப்பிவிட்டனர். நிகிதா என்னிடம் 2006-ம் ஆண்டு பி.எட் மாணவியாக பயின்றவர். முக்கிய பிரமுகர்கள், அவருடைய உதவியாளர்களை, தங்களுக்கு தெரியும் எனக்கூறி பலரையும் இந்த குடும்பத்தினர் ஏமாற்றி இருக்கிறார்கள். கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தற்போது திருப்புவனத்தில் நகை திருட்டு போனதாக கூறி இருப்பதுகூட பொய்யான தகவலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இந்த மோசடியில் தொடர்புடைய நிகிதாவின் தந்தை ஜெயப்பெருமாள் துணை கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்" இவ்வாறு அவர் கூறினார்.
3 முறை விவாகரத்து
தற்போது திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்க்கும் நிகிதா விசாரணைக்கு அழைக்கும்போது கண்டிப்பாக செல்வேன் என்றார். இவர் 3 முறை திருமணமாகி விவாகரத்தானவர் என்றும், நிகிதாவுக்கு குழந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications