இங்கிலிஷ் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்.. கேட்டதும் உதயகுமார் தந்த ரியாக்சன்.. கலகலப்பான மதுரை
மதுரை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பெரியார் கட்அவுட் வைக்கப்பட்டது பற்றி தமிழில் கேட்ட கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ஆங்கிலத்தில் பதிலளித்தார். அதனை கேட்டதுமே பின்னால் நின்ற முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குபீரென சிரித்தது பிரஸ்மீட்டை கலகலப்பாக்கியது.
தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளார். தற்போது அவர் எச் வினோத் இயக்கத்தில் கடைசி படத்தில் நடித்து வருகிறார்.

அந்த திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜய் சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதன்பிறகு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். மேலும் தனது கட்சியை பலப்படுத்தும் பணியில் நடிகர் விஜய் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். அதன்பிறகு கட்சி கொடியை அறிமுகம் செய்தார். கட்சியின் கொள்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். மேலும் கட்சி கொள்கைகளையும், கட்சியின் திட்டங்களையும் அவர் அறிவிக்க உள்ளார். இதனால் நாளை மறுநாள் நடக்கும் அரசியல் மாநாடு என்பது அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் திரளாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக வி சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் ஒரு கட்அவுட் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது ஒருபுறம் அம்பேத்கர், இன்னொரு புறம் முன்னாள் முதல்வர் காமராஜர், பெரியார் உள்ளனர். இவர்களுக்கு நடுவே நடிகர் விஜயின் பெரிய கட்அவுட் உள்ளது. இதனால் பெரியார் கொள்கைகளை விஜய் கடைப்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்பி உதயகுமார் உடன் இருந்தனர். அப்போது திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். முதல் மாநில மாநாட்டில் பெரியார் கட்அவுட்டை வைத்துள்ளார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், ‛‛தெரியலை.. நீங்கள் எல்லாம் பார்த்து இருக்கீங்க.. எங்களுக்கெல்லாம் தெரியலை.. No Comments Before That மாநாடு.. After மாநாடு We Will Tell Something.. ஆங்க்.. அவ்வளவுதானே'' என்று கூறினார். இதை கேட்டதுமே திண்டுக்கல் சீனிவாசனின் பின்னால் நின்ற முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குபீரென சிரித்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications