மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் இல்லை.. அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு!
மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ஆதார் அட்டையை காட்டி உள்ளூர் மக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் எனவும் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கப்பலூர் டோல்கேட்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெடித்த போராட்டம்: சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில், உள்ளூர் பொதுமக்கள், அதிமுகவினர் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முழக்கம் எழுப்பினர். இதனால் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கும் பழைய முறையே தொடரும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறினர்.
பேச்சுவார்த்தை: இதையடுத்து, போலீசார் போராட்டக்காரர்களிடமும், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு அளிக்கப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்தது.
கப்பலூர் சொந்தச் சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி நாளை முதல் மீண்டும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கட்டணம் இல்லை: இந்த பேச்சுவார்த்தையில், 2020 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மூர்த்தி பேட்டி: கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ சுற்றுவட்டார மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம் என்றும், உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications