அமாவாசையில் முக்கிய அறிவிப்பு.. அதிமுகவைக் கைப்பற்ற வியூகம் வகுக்கும் ஓ.பன்னீர் செல்வம்
தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக கூறும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவை கைப்பற்ற வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக உறுதியாக நம்பும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவை கைப்பற்ற புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமாவாசை நாளில் அதிமுக அலுவலகம் வந்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பருவமழையையும் தாண்டி பரபரப்பாக உள்ளது தமிழக அரசியல் களம். அதிமுகவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகவே அனலடிக்கிறது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என்ற இரட்டை தலைமைக்கு இடையே தலைமையைக் கைப்பற்றுவதற்கான போர் தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது.
போஸ்டர் யுத்தம் ஒருபக்கம் மறுபக்கம் நேரடி யுத்தம் என களைகட்டி வருகிறது அதிமுகவின் உள்கட்சி மோதல்.
அதிமுக நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களும், இந்நாள் எம்எல்ஏக்களும் தினம் தினம் ஒ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக பேட்டி அளித்து தொண்டர்களின் பல்ஸ் பார்த்து வருகிறார்கள்.

அதிமுக பொதுக்குழு
கடந்த 23ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கூடியது. கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார். பொதுக்குழுவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. ஆனால் அது அவர் மீது படவில்லை. 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக கூறினார் சி.வி. சண்முகம்.

ஒற்றைத்தலைமை தீர்மானம்
வரும் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை தீர்மானம் பொதுக்குழுவில் நிறை வேற்றப்படும் என்று கூறி உள்ளார் ஜெயக்குமார். அது நடக்கவே நடக்காது அதற்கு வாய்ப்பில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். மாறி மாறி பேட்டி கொடுத்து பரபரப்பை நாளுக்கு நாள் ஏற்றி வருகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

தொடரும் போராட்டங்கள்
ஒற்றைத்தலைமை விவகாரத்தால் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. அலுவலகங்களில் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் அகற்றப்பட்டும், பேனர்களில் ஓ.பி.எஸ். படங்கள் அழிக்கப்பட்டும் வருகின்றன. நாகை உள்ளிட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றது. அதிமுக இப்போது இரண்டு பட்டு
கிடக்கிறது.

ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வழியாக பெரியகுளம் சென்றுள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவரை வரவேற்ற தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக நம்பிக்கையோடு கூறினார். பன்னீர் செல்வத்தைப்போல உண்மையான தொண்டனைப் பெற்றது அதிமுக செய்த பாக்கியம் என்று ஜெயலலிதா கூறியதுதான் மிகப்பெரிய பாராட்டு என்றும் கூறினார்.

சதிவலை பின்னியவர்கள்
கட்சிக்கும் தனக்கும் எதிராக சதிவலையை பின்னியவர்களை விரைவில் தொண்டர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும் கூறினார் ஓ.பன்னீர் செல்வம். உண்மை தொண்டர்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என்றும் அது எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே என்றும் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். எம்ஜிஆர் உயில் பற்றி எல்லாம் பேசி வருகிறார் செல்லூர் ராஜூ. குடும்ப அரசியல் பேசி கதிகலங்க வைக்கிறார் ஆர்.பி. உதயகுமார்.

கட்சியை கைப்பற்ற வியூகம்
இந்த நிலையில் அதிமுகவைக் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை சென்னை வரும் ஓ.பன்னீர் செல்வம் செவ்வாய்கிழமை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

அமாவாசையில் அறிவிப்பு
அன்று அமாவசை தினம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் அவரது அறிவிப்புகள் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டங்களை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி அணியினரும் அதிரடியாக தயாராகி வருகின்றனர்.

பொன்விழா காணும் அதிமுக
ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்ற பிரச்சினையில் இருவரும் நீதிமன்றத்திற்கு செல்லாமல் சுமூகமாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொன்விழா காணும் இந்த நேரத்தில் அதிமுக பிளவு படக்கூடாது என்பதே உண்மை தொண்டர்களின் விருப்பம். அது நிறைவேறுமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications