ஓ பன்னீர் செல்வமா வாய்ப்பே இல்லை.. அவர் ஒரு கேன்சர்.. எடப்பாடி தயாராக இல்லை.. மதுரை எம்எல்ஏ தாக்கு
மதுரை: அதிமுகவை பொருத்தமட்டில் ஓபிஎஸ் புற்றுநோயாகதான் இருப்பார் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது கூறியிருப்பதாவது: மன்னிப்புக் கடிதம் தொண்டர்களுக்கு மட்டுமே. ஓபிஎஸ்ஸுக்கு அல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், ஓபிஎஸ்ஸை வரவேற்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை.

ஓபிஎஸ் அதிமுகவில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை. கட்சிக்கு அவர் செய்த தவறுகள், துரோகங்கள் ஏராளம். திமுகவுடன் இருக்கும் தொடர்புகளை விட்டுவிட்டு ஓபிஎஸ்ஸால் வர முடியாது. அதிமுகவை பொருத்தமட்டில் ஓபிஎஸ் புற்றுநோயாகத்தான் இருப்பார்.
நிச்சயமாக அவரால் கட்சிக்கு பலன் கிடைக்காது. கட்சியில் இருந்து கொண்டே கட்சியை கெடுத்துவிடுவார். அதிமுகவுக்கு பன்னீர் செல்வம் வராமல் இருப்பதே மேல். அவர் வருவதால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை. இவ்வாறு ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் மதுரையில் பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டவர்களும், கட்சியின் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கட்சியில் சேருபவர்களும் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ்ஸும் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவரை கட்சியில் சேர்ப்பார்கள் என்றுதான் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியிருந்தனர்.
இதற்கு ஓபிஎஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் டிடிவி தினகரனும், என்னிடமும் சசிகலா, ஓபிஎஸ்ஸிடமும மன்னிப்பு கேட்க வேண்டியவர் எடப்பாடியும் அவரது தரப்பினரும்தான். அவர்கள்தான் எங்கள் மூவருக்கும் துரோகம் இழைத்துள்ளார்கள் என டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications