மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி இனி இருக்கக்கூடாது.. ஆவேசமாக வந்த உள்ளூர் மக்கள்.. ஆடிப்போன அதிகாரிகள்
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து, பழைய முறையே தொடரும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என டி கல்லுப்பட்டி பேரையூர் மக்கள் அதிரடி காட்டியுள்ளனர்.

மதுரையைச் சுற்றிலும் சுங்கச்சாவடிகள் எல்லா நான்குவழிச்சாலையிலும் இருக்கிறது. இதில் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலையிலேயே செயல்படுகிறது. மதுரைக்கு விடியல் வேண்டும் என்றால், இந்த சுங்கச்சாவடியை அகற்றுவதாகவே இருக்கும்.அந்த அளவிற்கு மக்களுக்கு இந்த சுங்கச்சாவடி மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த கப்பலூர் சுங்கச்சாவடியை எப்படியாவது அகற்ற வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளூர் மக்களான மதுரை திருமங்கலம் டி கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்கள் இந்த சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும் சுங்கச்சாவடியை மூடிய பாடில்லை. இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது
உள்ளூர் வாகனங்கள் 4 ஆண்டுகளாக சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் கட்டணத்தை ஒருவாரத்தில் செலுத்துமாறு கடந்த 2 ஆம் தேதி சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அப்படி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. இதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, உள்ளூர் மக்கள் 50% சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கி வந்த நிலையில், இன்று முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் உள்ளூர் வாகனங்கள் 50% சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை முழு கட்டண விலக்கில் சென்று வந்த உள்ளூர் வாகனங்கள் இன்று முதல் 50% கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் வாகன ஓட்டிகள் வாகனங்களை எடுத்துக்கொண்டு சென்று மொத்தமாக முற்றுகையிட்டனர்.
மதுரை திருமங்கலம் டி கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்கள் அதிரயாக போராட்டத்தில் குதித்துள்ளனர். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பழைய முறையே தொடரும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.இது ஒரு புறம் எனில், மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். கப்பலூர் சுங்கச்சாவடியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications