நயினார் நாகேந்திரன் கூட்டத்திற்கு க்ரீன் சிக்னல் – நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய காவல் துறை
மதுரை: தவெக கரூர் கூட்ட அசம்பாவிதத்திற்கு பிறகு பொது இடங்களில் அரசியல் கூட்டம் நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கும் வரை, எந்த அரசியல் கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு கூறியிருந்தது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இருந்து தொடங்கும் சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் பல மக்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

அரசியல் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு
காவல்துறை அனுமதி வழங்க இழுத்தடித்ததும், உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தவெக புகார் கூறியது. ஏன் கரூரில் மட்டும் இந்த பிரச்சனை ஆனது. முதலமைச்சருக்கு பழிவாங்க வேண்டும் என்றால் என்னை கைது செய்து கொள்ளட்டும் என்று விஜய் கூறியிருந்தார். தவெக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவில்லை. கட்சி கட்டமைப்பு இல்லை என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தவெக மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மாயமாகியுள்ளனர். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதால், இனி தமிழ்நாட்டில் பொது இடங்களில் நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. விஜய்யின் பிரச்சார பயணம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்
இதேபோல தேமுதிக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிகாட்டி முறை வெளியிடும் வரை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியது, எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தை தனியார் மைதானத்தில் நடத்த ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிர தமிழனின் சுற்றுப்பயணம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன் தொடக்க விழா மதுரையில் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
காவல்துறை அனுமதி
தற்போதைய சூழலில் அந்தக் கூட்டமும் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்திற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கூட்டத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது. கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு பாஜக சார்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
நயினாரின் முதல் கட்ட சுற்றுப்பயணம் மதுரையில் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மற்ற தலைவர்களின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பது விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications