சரித்திர பதிவேடு போக்கிரிகள் வீடுகளில் போலீஸ் ரெய்டு..ஆயுதங்கள் பறிமுதல்..மதுரையில் 9 பேர் கைது
மதுரையில் ரவுடிகளின் வீடுகளில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: ரவுடிகள் வீட்டில் காவல்துறையினர் நடத்திய தொடர் சோதனையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகரம் புறநகர் பகுதிகளில் 400 பேரின் வீடுகளில் காவல்துறையினர் கடந்த 15 நாட்களாக தொடர் சோதனை நடத்தியதில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்து விட்டதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ரவுடிகள் , கொள்ளையர்கள் கொட்டத்தை ஒடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி, ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி அதன்மூலம் கொள்ளையர்களை கைது செய்து வருகின்றனர்.

மதுரையில் ரவுடிகள் வீடுகளில் போலீஸ் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 400பேரின் வீடுகளில் கடந்த 5-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தொடர் சோதனை நடந்தது. சோதனையின் போது 5 வாள்கள், 2 பட்டாக்கத்திகள் மற்றும் அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் கடந்த 15 நாட்களில் 9 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர் என போலீஸ் கமிஷனர் நரேந்தின் நாயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவுப்படி, மதுரை நகரில் உள்ள காவல் நிலையங்களில் போக்கிரி சரித்திர பதிவேடுகள் கொண்ட நபர்கள் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையின் கீழ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மொத்தம் 400 ரவுடிகளின் வீடுகளில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தொடர் சோதனையில் 5 வாள், 2 கத்தி, 1 அரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சம்மந்தப்பட்ட நபர்கள் மீது திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்த்புரம், திடீர்நகர், கூடல்புதூர், அண்ணாநகர் ஸ்டேசன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சரித்திர பதிவேடுகள் கொண்ட பாலாஜி, கார்த்திகேயன் என்கிற மெண்டல் கார்த்திக், கருப்பையா என்கிற போதகர், சரவணன், நூர்கான், கார்த்திக், விக்னேஷ்வரன் என்கிற பெயிண்டர் விக்கி, பழனிக்குமார், மணிகண்டன் என்கிற உசிலை மணி ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications