மதுரையில் மொட்டை மாடிக்கு போன பெண்.. காத்திருந்த அந்த உருவம்.. எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு?
மதுரை: மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவரை, ராட்வீலர் நாய் கடித்து குதறிய சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. அரசு மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சையில் அப்பெண் உள்ளார்.. என்ன நடந்தது அந்த பெண்ணுக்கு?
மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுசாபுரம் 5-வது தெருவை சேர்ந்த தம்பதி கண்ணன்-ஜான்சி ராணி,.. இவர்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் 2 ராட்வீலர் ரக நாய்களை வளர்த்து வருகிறார்கள்.. ஜான்சி ராணியின் மகன் சென்னையில் வசித்து வருவதால் தம்பதியினர் மட்டுமே வீட்டிலிருந்து நாய்களை பராமரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு, மொட்டை மாடியில் காய வைத்த துணிகளை எடுப்பதற்காக ஜான்சிராணி மாடிக்கு சென்றுள்ளார். கொடியில் காயவைத்திருந்த துணிகளை எடுத்துவிட்டு, நாயின் அருகில் இருந்த துணியையும் எடுக்க முயன்றார் ஜான்சி.. அப்போது, திடீரென ஒரு நாய் ஜான்சிராணி மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்து குதறியது. இதில் அவரது இடது கை பலத்த சேதம் அடைந்து சிதைந்து நொறுங்கியது.

எலும்புகள் நொறுங்கின: அதாவது, கையிலுள்ள எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு சதைகளை குதறி எடுத்துவிட்டது.. இதனால் வலி தாங்க முடியாமல் ஜான்சி அலறி துடித்தார்.. அவரது அலறல் சத்தம் கேட்டு, ஜான்சிக்கு என்ன ஆச்சோ என்று அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ஆனால், மொட்டை மாடியில் நாயை பார்த்ததுமே, அருகில் செல்ல பயந்தனர்.. அதனால், நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. பிறகு ஒரு வழியாக நாயிடம் இருந்து தப்பித்து மாடியில் இருந்து மெதுவாக ஜான்சி கீழே இறங்கி வந்துள்ளார்.
அதற்கு பிறகுதான், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து அங்கிருந்தவர்கள் ஜான்சியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக சேர்க்கப்பட்ட ஜான்சிக்கு, இடது கை மிகவும் சேதம் அடைந்தது. அதனால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்..
அதிர்ச்சி: சிறுவயதில் இருந்தே பழக்கப்பட்ட நாய் என்றாலும், வளர்த்தவரையே கடித்து குதறியிருப்பது பெரும் பரபரப்பை மதுரையில் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மாடியிலுள்ள நாயை கட்டிப்போட்டு வைக்காததால், அந்த பகுதியிலுள்ள மக்கள் வெளியே வர பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்களாம்..!!
செல்லப்பிராணிகளாக இதுபோன்ற வெளிநாட்டு நாய் இனங்களை வளர்ப்பதை கவுரவமாக கொண்டு வளர்த்து வருகிறார்கள். அதிலும், இந்த ராட்வீலர் நாய்களை பொறுத்தவரை, ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு வீட்டு நாய் இனமாகும். பெரிய உருவத்துடன், மேல் தாடையில் 22, கீழ்தாடையில் 20 என, கத்திரிக்கோல் வடிவில் பல்வரிசை அமைந்திருக்கும்.
ராட்வீலர் நாய்: மற்ற நாய்கள் ஆவேசமாகி கடிக்கும் வேகத்தைவிட, இந்த ராட்வீலர் நாய் கடிக்கும் வேகம் அதிகம்.. அதாவது, ராட்வீலர் நாய் கடித்தால், மனிதர்களின் கை எலும்புகளே நொறுங்கி விடும் என்று ஏற்கனவே கால்நடை மருத்துவர்கள் கூறியிருந்தனர். அதன்படிதான் தற்போது ஜான்சிக்கும் எலும்புகள் உடைந்துள்ளன.
வீட்டில் வளர்க்கும் நபர், உணவு தரும் நபர் என அனைவரும் ஒருவரே இருந்தால்தான் இந்த நாயை பராமரிக்க முடியும். அப்படித்தான் ஜான்சியும் பராமரித்து வந்துள்ள நிலையில், உரிமையாளரையே கடித்து குதறியிருப்பது பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
மூர்க்கத்தனம்: வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.. அதுமட்டுமல்லாமல் மிக மிக மூர்க்கத்தனம் கொண்ட இந்த நாயை வளர்க்க வேண்டுமானால், கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.. இல்லாவிட்டால் சிறைதண்டனையும், அபராதமும் உரிமையாளருக்கு நிச்சயம் உண்டு..!!












Click it and Unblock the Notifications