கருப்பண்ணசாமிக்கு முடி காணிக்கை! மணமணக்க மட்டன் சுக்கா, குடல் கூட்டு.. அதிமுகவினருக்கு மாஜி விருந்து
மதுரை: மதுரையில் நடந்த அதிமுக மாநாடு வெற்றியடைந்ததற்காக வலையங்குளம் கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக மொட்டைப் போட்டு கிடா வெட்டிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கறி விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில் முதல் முறையாக மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநாட்டை நடத்தியிருந்தார்.

வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு என்ற பெயரில் அதிமுக மாநாடு வலையங்குளம் பகுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். இன்னும் மதுரைக்கு படையெடுத்தவர்கள் போக்குவரத்து நெரிசலால் விழா நடைபெறும் இடத்திற்கு வர முடியாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் ஆனதையடுத்து 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். இதையடுத்து மாலையில் அவர் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்களின் பொழுதை போக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் தேவாவிந் இசை நிகழ்ச்சி, செந்தில் - ராஜலட்சுமியின் கச்சேரி, ராமர், மதுரை முத்து, ரோபோ சங்கர் கலந்து கொண்ட காமெடி நிகழ்ச்சி, பட்டிமன்றம் என நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அது போல் தொண்டர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இந்த உணவு விஷயத்தில் பலருக்கு அதிருப்தி நிலவியிருந்தது.
புளி சாதம் சரியில்லை, வந்தவர்கள் சாப்பாட்டை குப்பையில் வீசி சென்றனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது. மேலும் 10 அண்டாக்களில் சாப்பாடு பூஞ்சை பிடித்து வீணானது. மாநாடு நடந்த இடத்தில் குவியல் குவியலாக அடிபிடித்த நிலையல் உணவுகள் இருந்தது. இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் புளி சாதம் தோல்வி, மாநாடு வெற்றி என்றார்.
அது போல் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும், சாப்பாடு சரியில்லை என்றார்கள். இதை பெரிதுப்படுத்த வேண்டாம். அடுத்த முறை திருத்திக் கொள்வோம் என்றார். இந்த நிலையில் அதிமுக மாநாடு வெற்றி அடைந்ததற்காக வலையங்குளத்தில் உள்ள கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக மொட்டை போட்ட ஆர்.பி. உதயகுமார் கிடா வெட்டி கறி விருந்து நடத்தினார்.
1000 பேருக்கு தலைவாழை இலை போட்டு மட்டன் சுக்கா, சிக்கன் கிரேவி, குடல் கூட்டு, குழி ஆம்லெட் என தடபுடலாக விருந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சியை ஆர்.பி. உதயகுமாருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார், கடந்த வாரம் இதே இடத்தில் எள்ளுகூட விழ முடியாத அளவுக்கு தொண்டர்கள் கூட்டம் இருந்தது.
மாநாட்டுக்கு வந்த வாகனங்கள் எல்லா திசைகளிலும் உள்ளே வர முடியாமல் காத்திருந்தன. மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தொண்டர்களுக்கு நன்றி சொல்லவே இந்த அன்னதானம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications