முருகன் மாநாட்டில் ராஜேந்திர பாலாஜி.. எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடு வந்தாராம்.. அவரே சொன்ன தகவல்!
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் தான் முருகன் மாநாட்டிற்கு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். முருகன் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, அதிமுகவில் 100 சதவிகிதம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த முருகன் மாநாட்டிற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருவதாக சொல்லப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவரின் வருகை ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மட்டும் முருகன் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

முருகன் மாநாடு
முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அதேபோல் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கூடி கந்தசஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
வாழ்த்து சொன்ன இபிஎஸ்
ஆனால் பாஜகவை தவிர்த்து மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் வாழ்த்து மட்டுமே கூறினார்.
மதுரை அதிமுக நிர்வாகிகள்
இதனிடையே மதுரை மாவட்ட அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினால் மட்டுமே முருகன் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி யோசிப்போம் என்று பதில் அளித்தார்.
மதுரை வந்த ராஜேந்திர பாலாஜி
இந்த நிலையில் மதுரை முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றுள்ளார். நேற்றிரவு மதுரை வந்த ராஜேந்திர பாலாஜி, முருகன் மாநாடு திடலை பார்வையிட்டு, முருகனை வணங்கி சென்றார். அப்போது அவருக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி பேட்டி
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தடைகளை உடைப்பதே முருகனின் அவதாரம். ஆன்மீகவாதிகளுக்கு எதிரான கருத்துகளை பரப்பக் கூடிய நச்சு உள்ளம் கொண்டவர்களை விரட்டியடிக்கும் வகையில் தீர்ப்புகளை பெற்று மாநாடு நடந்து வருகிறது. பக்தர்கள் மனம் புண்படும் வகையில் தமிழக அரசு நடந்து கொண்டது. அதனை முறியடித்து மக்கள் எந்த அனுமதியும் இல்லாமல் மாநாட்டில் கலந்து கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி அனுமதி
எடப்பாடி பழனிசாமியிடம் செல்ஃபோனில் அழைத்து பேசினேன். அவரும் உடனே செல் என்று கூறினார். அதிமுகவை பொறுத்தவரை ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர்களே 100 சதவிகிதம் இருக்கிறார்கள். அதுவும் முருகன் எனக்கு பிடித்த கடவுள். அதனால் மதுரையில் நடக்கும் முருகன் மாநாடு ஒரு ஆன்மீக திருவிழா என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications