மதுரைக்கு என்ன செய்தீர்கள் என கேட்ட பிடிஆர்.. ஆர்.பி.உதயகுமாருக்கு வந்த கோபம்.. காட்டமாக பதிலடி
மதுரை: அதிமுக ஆட்சியில் மதுரைக்கு எந்தவொரு வளர்ச்சி திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்து இருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.பி உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரையில் சமீபத்தில் மூன்றுமாவடி என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு இருந்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாகவே அதிமுக ஆட்சியில் மதுரையில் எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் செய்யப்படவில்லை என்று விமர்சித்து இருந்தார்.

ஆர்.பி.உதயகுமார்
இந்நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் மதுரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை மூன்றுமாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். அப்படி அவர் கூறியிருப்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் கதையாக உள்ளது. இதை மதுரை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்.

எடப்பாடி அரசு
குறிப்பாக ஜெயலலிதா அரசைத் தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்ட மக்களுக்குத் தனி அக்கறையோடு பல்வேறு வளர்ச்சிகளைத் தந்துள்ளார். குறிப்பாக மதுரை மக்கள் மீது தனி அக்கறை காட்டி மக்களின் எதிர்கால நன்மை குறித்து பல்வேறு வரலாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். தென் மாவட்ட மக்களின் கோரிக்கை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கிக் கொடுத்தார். இதற்காக 223 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது எடப்பாடி தலைமையிலான ஜெயலலிதா அரசு ஆகும். மேலும் அங்கு 21 கோடியில் சாலை மற்றும் பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டன. எய்ம்ஸ் கட்டிட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

திட்டங்கள்
மதுரை மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு எந்த குடிநீர் பிரச்சினை வராத வண்ணம் ரூ. 1,296 கோடி மதிப்பில் முல்லை பெரியார் லோயர் கேம் வழியாகக் கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதேபோல் ரூ.30 கோடி மதிப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிடத்தை உருவாக்கிக் கொடுத்தார். மதுரையில் சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ 974.86 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் 167 கோடி மதிப்பில் பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டது. அந்த முடிவுற்ற பணியை தற்போதைய முதலமைச்சர் திறந்து வைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன். அதேபோல் மதுரை மாட்டுத்தாவணியில் 12 கோடியில் பழ சந்தை அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதேபோல் தமக்கம் மைதானத்தில் ரூ 47 கோடி மதிப்பில் கலாச்சார மையம் கட்டும் திட்டத்தைத் தந்தது ஜெயலலிதா அரசு! வைகை ஆற்றின் குறுக்கே 4 தடுப்பணைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் உருவாக்கப்பட்டது" என்று அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

பாரபட்சம் இல்லை
மேலும் அவர், "கடந்த 10 ஆண்டுகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எந்த பாரபட்சமின்றி திட்டங்களை ஜெயலலிதா அரசு வழங்கியது. அதனால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட திமுகவின் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை மீறி மதுரை மக்கள் 5 தொகுதிகளை அதிமுகவிற்கு வழங்கினார்கள். ஜெயலலிதா அரசு செய்த பல ஆயிரம் கோடி வளர்ச்சி சாதனை திட்டங்களை எதுவும் செய்யவில்லை என்று கூறி முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க முடியாது, பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்கக் கூடாது.

உண்மையைச் சொல்லுங்கள்
மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்கள் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அரசியல் உள்நோக்கத்தோடு இருக்கக் கூடாது என்பதை நிதி அமைச்சர் நன்கு அறிவார். அரசு பொறுப்பில் உள்ள நீங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான திட்டங்கள் செய்ய வேண்டும். தற்போது தான் மதுரை மாநகராட்சிக்கு மாஸ்டர் பிளான் எனக் கூறி உள்ளீர்கள். இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டுக் கால ஆட்சியில் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டங்கள் செய்யப்பட்டது என்று பட்டியலிட்டுக் கூற முடியுமா?

திமுக அரசு
இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் கருணாநிதி பெயரில் நூலகம் தான் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் நூலகத்தை தங்கள் இல்லம் தேடி வரவழைக்கும் வேளையில் மக்கள் நூலகங்களை நாடுவார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , கனமழையால் உயிரிழப்புகள், வீடு சேதாரம் என்று விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார் .குறிப்பாக அதில் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு கொடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பு உள்ளார், அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும்.

வாய்ச் சொல் வீராக
வாய் சொல் வீராக இருப்பது வளர்ச்சியைத் தந்துவிடாது. மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கும் மந்திரியாக உள்ளீர்கள், மதுரை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகக் கடந்த ஒன்ற ஆண்டுகளில் என்னென்ன சிறப்பு நிதியைக் கொண்டு வந்தீர்கள், என்று விளக்கம் சொன்னீர்கள் என்றால் உங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் மட்டுமல்லாது நானும் மகிழ்ச்சி அடைவேன்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications