தனியாக ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்.. பீதியில் உறைந்த 87 பயணிகள்.. தென்காசியில் பரபரப்பு!
மதுரை: மதுரையில் இருந்து குற்றாலத்திற்கு 87 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து, திடீரென கடையநல்லூர் அருகே சென்ற போது பின்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பின்பக்கம் அமர்ந்திருந்த மாணவர்கள் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அரசுப் பேருந்தில் பயணிப்போர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மாதம் சிவகங்கை மாவட்டம் தட்டான்குளம் பகுதியில் 40 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தில் திடீரென டயர் வெடித்து சிதறியது. இதனால் பேருந்தை நிறுத்த ஓட்டுநர் முயற்சித்த போது, டயர் தனியாக கழன்று ஓடியது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அப்போதே அரசுப் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் மதுரையில் இருந்து குற்றாலம் சென்ற பேருந்தின் பின்பற்ற சக்கரங்கள் பேரிங்குடன் தனியாக கழன்று விழுந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மதுரையில் இருந்து குற்றாலத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று 87 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சென்ற போது, திடீரென பின்பக்க ஆக்சில் துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் தனியாக கழன்று ஓடின. இதனால் பேருந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பின்பக்கம் அமர்ந்திருந்த மாணவர்கள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்பற்ற டயர் தனியாக கழன்று ஓடியது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின் பேருந்து ஓட்டுநர், நடத்துவர் இணைந்து மாற்று பேருந்தை வரவழைத்து பயணிகளை அனுப்பி வைத்தனர். அதேபோல் பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடிய போது பின்னால் எந்த வாகனமும் வரவில்லை. அப்படி வராததால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பேருந்து பராமரிப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து கழகத்திடம் கேள்வி எழுப்பிய போது, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பேருந்தை முறையாக பராமரிக்காத அலுவலகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் அரசுப் பேருந்தில் பயணிக்கும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications