மதுரை பெண் ஆர்டிஓவிடம் பாஜக நிர்வாகி நடந்து கொண்ட விதம்.. வருவாய்த் துறை அலுவலர் சங்கம் கண்டனம்
மதுரை மாவட்டம் ஆனையூர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வருவாய்த்துறை அலுவலர்களான மதுரை வருவாய் கோட்டாட்சியர், மதுரை வடக்கு வட்டாட்சியர் குலமங்கலம் வருவாய் ஆய்வாளர் ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர் கள ஆய்வு பணி செய்தபோது பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஹரிச்சந்திரன் வருவாய் கோட்டாட்சியரை பெண் என்றும் பாராமல் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியதை கண்டிப்பதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் கூறியுள்ளது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் அரசாணையின்படி வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான பூர்வாங்க பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

அதேபோன்று மதுரை மாவட்டத்திலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் துறை அலுவலர்கள் இரவு பகல் பாராது விடுமுறை நாட்களிலும் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் தங்களது பணியினை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டம், ஆனையூர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வருவாய்த்துறை அலுவலர்களான மதுரை வருவாய் கோட்டாட்சியர், மதுரை வடக்கு வட்டாட்சியர் குலமங்கலம் வருவாய் ஆய்வாளர் ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர் மற்றும் வருவாய் அலுவலர்களால் கள ஆய்வு பணி செய்தபோது பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஹரிச்சந்திரன், ஞானமணி, ரூபேஷ் ஆகியோர் அரசு அலுவலரான மதுரை வருவாய் கோட்டாட்சியரை பெண் என்றும் பாராமல் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர்.
விடுமுறை தினம் என்றும் பாராமல் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தோடு பணியில் இருந்த வருவாய்த்துறை அலுவலர்களை பணி செய்ய விடாமல் ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்து தடுத்துள்ளனர். மேற்படி நபர்களின் அடாவடி போக்கை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோரை கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற சூழல்களில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இதனிடையே ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் கோதை நாச்சியார் கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் பாஜக பிரமுகர் ஹரிச்சந்திரன் மற்றும் ஞானமணி, ரூபேஷ் ஆகிய 3 பேர் மீது பிஎன்எஸ் 296 (பி), 126 (2), 132 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கூடல் புதூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications