சேலம் தாசில்தார், உசிலம்பட்டி சார் பதிவாளர், மதுரை எஸ்ஐ.. அடுத்தடுத்து கைதான அரசு ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சேலத்தில் தாசில்தார், உசிலம்பட்டியில் சார் பதிவாளர், மதுரையில் சப் இன்ஸ்பெக்டர் என அடுத்தடுத்து லஞ்சம் வாங்கியதாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் வாங்குவது குறித்து புகார் வந்தால், கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 3 பேர் லஞ்ச புகாரில் கைதாகி உள்ளனர். முன்னதாக விஏஓ, சர்வேயர்களும் கடந்த வாரத்தில் கைதாகி உள்ளனர்.

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அல்லது லஞ்சம் கேட்டால், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் லஞ்சம் கேட்டதற்கான ஆடியோ அல்லது வீடியோவை அனுப்பினால், அதை வைத்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிடுவார்கள். ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்தனுப்புவார்கள். இறுதியாக லஞ்சம் வாங்கிய அதிகாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்வார்கள். அரசு ஊழியர்கள் எந்த துறையாக இருந்தாலும் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கினால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். போலீசாக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். மதுரையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

madurai salem government employee

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த தங்கமுருகன் என்பவருடய மகள் கவிதா, சில மாதங்களுக்கு முன்பு, ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் ஏற்பட்ட அடிதடி வழக்கு தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். அதில், தொடர்புடைய 2 பேரை ஜெய்ஹிந்தபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடிவந்தார்கள். அவர்கள் மீது கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு, ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சண்முகநாதன்(வயது 35) லஞ்சம் கேட்டதாக கவிதா குற்றம்சாட்டினார்.

சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் ரூ.70 ஆயிரம் கொடுத்தால், தங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறினாராம்.. மேலும், முன்பணமாக ரூ.30 ஆயிரத்தை, புதூர் பகுதியில் வைத்து கொடுக்கும்படி, கவிதாவிடம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் கூறினாராம்.

இந்த விவகாரம் தொடர்பாக கவிதா, மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, சூர்யகலா ஆகியோரின் ஆலோசனைப்படி, ரசாயன பவுடர் தடவிய பண நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார், கவிதாவிடம் கொடுத்தனர்.

அந்த பணத்தை பெற்று கொண்ட கவிதா, நேற்று இரவு மதுரை புதூர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன், கவிதாவிடம் இருந்து பணத்தை வாங்கி மோட்டார் சைக்கிளின் முன்பையில் வைத்துள்ளாராம்.உடனே அந்த பகுதியில் மறைந்து நின்றிருந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக சண்முகநாதனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சண்முகநாதனிடம் இருந்த பணத்தை மீட்டு, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் மதுரை போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச புகாரில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த பணிக்காக மாவட்ட கலெக்டரிடம் விருது பெற்றவர் என்று கூறப்படுகிறது.

உசிலம்பட்டி சார் பதிவாளர் கைது : முன்னதாக உசிலம்பட்டியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்த 38 வயதாகும் மலைராஜன் என்பவர், தனது தாத்தா பெயரில் உள்ள 4 சென்ட் இடத்தை பாக பிரிவினை செய்து, சகோதரர்களான 4 பேருக்கு பத்திர பதிவு செய்ய உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சார்பதிவாளரான ஜியாவுதீனை(47) அணுகினாராம். அவர் பத்திர பதிவிற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம்.

அப்போது மலைராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இறுதியில் ரூ.20 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மலைராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை மலைராஜனிடம் கொடுத்தனர்.. அதனை, உசிலம்பட்டி சார் பதிவாளர் ஜியாவுதீன், அவரது உதவியாளர் எடிசன்(38) மூலம் லஞ்சமாக பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

சேலம் தாசில்தார் கைது: நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, ரூ.5 லட்சம் லஞ்ச பணத்திற்கு, ரூ.10 ஆயிரம் முன்பணம் வாங்கிய தாசில்தாரை சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த மஞ்சுளா என்பவர் நில அளவீடு செய்து நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக , கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனை அணுகினாராம்.

அப்போது, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தார் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முன்பணமாக தை அமாவாசை தினத்தன்னு 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பதாத மஞ்சுளா, இது சம்பந்தமாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரு.10 ஆயிரத்தை முன்பணமாக தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விஏஓ , சர்வேயர் மட்டுமின்றி தாசில்தார், சார் பதிவாளர், சப் இன்ஸ்பெக்டர் என அடுத்ததடுத்து கைதாகி வருகிறார்கள். மக்கள் லஞ்ச புகார் கூறினால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+