சூர்யவம்சத்தில் தேவயானியை கலெக்டராக்கினேன்.. இப்போது ராதிகாவை எம்பியாக்குவேன்.. சரத்குமார் சரவெடி
மதுரை: சூர்யவம்சம் படத்தில் எப்படி தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ அது போல் ராதிகாவை எம்பியாக்குவேன் என சரத்குமார் சூளுரைத்துள்ளார்.
ராதிகா சரத்குமார் விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் போட்டியிடும் அவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராதிகாவையும், சரத்குமாரையும் பாஜகவினர் வரவேற்றனர். இதையடுத்து சுவாமி தரிசனம் செய்த பிறகு சரத்குமாரும் ராதிகாவும் வெளியே வந்தனர். அப்போது அவர்கள் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது ராதிகா கூறுகையில் முதலில் விருதுநகரில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன். உணவு, இருக்கிற இடம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திதான் நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி எத்தனையோ விஷயங்களை நாட்டுக்கு செய்திருக்கிறார்கள்.
அவற்றில் நிறைய விஷயங்கள் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. அவற்றை செயல்படுத்த நாங்கள் கண்டிப்பாக பாடுபடுவோம் என்றார் ராதிகா. அப்போது "நீங்கள் போட்டியிடாமல் ராதிகா போட்டியிடுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்" என செய்தியாளர், சரத்குமாரிடம் கேட்டார்.
அதற்கு சரத்குமார் கூறுகையில், நான் போட்டியிட்டாலும் சரி என் மனைவி போட்டியிட்டாலும் சரி, எல்லாமே ஒன்றுதான். ராதிகாவுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது , எனக்கு வாய்ப்பு கொடுத்தது போல்தான். மக்களுக்கு கொடுத்த வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். நல்ல ஒரு பிரதிநிதி விருதுநகருக்கு வேண்டும்.
அதிலும் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கும் போது நாமும் மகளிருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்கிறார்கள். அந்த பெண் சக்தியை மோடி சிறப்பாக கவனித்து மகளிருக்கு அதிக வாய்ப்புகளை அளித்து வருகிறார்.
மகளிருக்கு வாய்ப்புக் கொடுக்கும் போது சூர்யவம்சம் படத்தில் எப்படி நான் படிக்காமல் தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ அது போல் ராதிகாவை வெற்றி பெற வைக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கு உண்மையாக உழைப்போம்.
விருதுநகர் பிரச்சினை இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகள் குறித்தும் ராதிகா கடந்த ஒரு மாதமாக படித்து வைத்துள்ளார். எனவே இந்த தொகுதியின் பிரச்சினை என்ன என்பதை ராதிகா நன்கு அறிந்திருக்கிறார். காமராஜர் பிறந்த மண்ணில் போட்டியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது 1954 முதல் 1963 வரை அப்பழுக்கற்ற ஆட்சியை காமராஜர் தந்தார். இன்று அதே ஆட்சியை பிரதமர் கொடுத்து வருகிறார். மத்திய அரசு திட்டங்கள் வந்தாலும் அதை மாநில அரசு திட்டங்களாக உருவாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகாவும், அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகிறார்கள். ராதிகா சரத்குமார் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் அவரது திரைப்படம், சீரியல், விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் பணிக் குழு நிர்வாகி செய்யது பாபு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஆதரவாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பிரச்சாரம் செய்வதால் அவருடைய படங்களை திரையிட தடை கோரி பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
