#HBD சின்னம்மா: பெங்களூரு சிறைக்குள் சசிகலா... பிறந்தநாள் போஸ்டர் ஒட்டி தெறிக்க விடும் மதுரைவாசிகள்
மதுரை: பெங்களூரு சிறையில் கடந்த மூன்றாண்டுகளை கழித்து விட்டார் சசிகலா. அவர் விடுதலையாவது பற்றி பல வித ஊகங்களும் வதந்திகளும் வெளியான நிலையில் இந்த ஆண்டும் பிறந்தநாளன்று சிறையில் மவுன விரதம் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி தெரிக்க விட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் திருமங்கலம் வரைக்கும் சசிகலாவின் பிறந்தநாளுக்காக பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் தோழியாக உடன்பிறவா சகோதரியாக போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வலம் வந்தார் சசிகலா. ஜெயலலிதாவிற்கு அனைத்துமாக இருந்தார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவினரின் சின்னம்மாவாக மாறினார். கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டார்.
ஒ.பன்னீர் செல்வத்தை பதவியில் இருந்து இறக்கிவிட்டு முதல்வராக முயற்சி செய்தார் சசிகலா. ஆனால் காலமும் நேரமும் கூடி வரவில்லை எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்து விட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு போனார் சசிகலா.

ஆகஸ்ட் 18 பிறந்தநாள்
சசிகலாவிற்கு ஆகஸ்ட் 18 பிறந்தநாள். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் ஒவ்வொரு ஆண்டும் அவரது காலில் விழுந்து ஆசி வாங்குவதோடு முதல் வாழ்த்தும் பரிசும் ஜெயலலிதா கைகளில் இருந்து பெற்றுக்கொள்வார் சசிகலா. அவரது மரணத்திற்குப் பிறகு சசிகலா பிறந்தநாளை கொண்டாடுவதில்லை.

போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள்
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளில் மவுன விரதம் இருந்து வருகிறார். நாளை ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் குல தெய்வமே
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சற்றே வித்தியாசமானவை. தமிழ்நாடு சின்ன அம்மா பேரவையின் நிறுவனர் தமறாக்கி ஏஎல் சின்னத்தம்பி என்பவர்தான் மதுரை மாநகரத்திலும் புறநகர் பகுதிகளிலும் திருமங்கலத்தின் பல பகுதிகளிலும் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி சசிகலாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தெறிக்க விடும் போஸ்டர்கள்
தமிழகத்தின் குல தெய்வமே என்றும், தமிழகத்தின் எதிர்பார்ப்பே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களையும் ஒட்டி சசிகலாவை வணங்கியுள்ளார் சின்னத்தம்பி. சசிகலா சிறையில் இருக்கும் போதே இப்படி போஸ்டர் ஒட்டி தெறிக்க விடுகின்றனர். இனி சசிகலா சிறையில் இருந்து வந்து விட்டாலே போதும் எப்படி எல்லாம் போஸ்டர் ஒட்டி கொண்டாடப்போகிறார்களோ.












Click it and Unblock the Notifications