இரண்டு முறை குற்றவாளிகளை தூக்கிலிடுவார்களா? இரட்டை மரண தண்டனை என்றால் என்ன?
மதுரை: சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை கொடுக்க முடியும். அப்படி இருக்கையில் எப்படி இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இந்திய தண்டனை சட்டங்களை பொறுத்தவரை, ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். சாத்தான்குளம் வழக்கும் அப்படித்தான்தான் நடந்திருக்கிறது.

ஒருவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு இரண்டு முறை மரண தண்டனை விதிக்கப்படுவதே 'இரட்டை மரண தண்டனை' எனப்படும். சாத்தான்குளம் வழக்கில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் என இருவர் கொல்லப்பட்டதால், ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக ஒரு மரண தண்டனை என மொத்தம் இரண்டு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தந்தை மற்றும் மகன் என இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி (IPC/BNS) இரண்டு கொலைக் குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அல்லது அடுத்தடுத்து இரண்டு பேரைக் கொலை செய்வது 'அரிதினும் அரிதான' செயலாகக் கருதப்படுகிறது. இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு உச்சகட்டத் தண்டனையை உறுதிப்படுத்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளிக்கும்.
நடைமுறையில் எப்படி நிறைவேற்றப்படும்?
நடைமுறையில் ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும், தூக்கிலிட முடியும். ஆனால், சட்டப்பூர்வமாக ஒரு மரண தண்டனை மன்னிப்பு அல்லது மேல்முறையீடு என ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டலாம் அல்லது குறைக்கப்படலாம். அப்படி செய்தால் மற்றொரு மரண தண்டனை அமலில் இருக்கும். இது குற்றவாளிக்கு சலுகை கிடைப்பதைத் தடுத்து, அவர் செய்த ஒவ்வொரு உயிரிழப்புக்கும் உரிய தண்டனையை உறுதி செய்கிறது. எனவேதான் இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications