பாஜக மனு கொடுத்தாங்க.. நாங்க அவங்க கூட சென்று ஸ்வாகா பாடினோம்.. செல்லூர் ராஜூ நக்கல்!
மதுரை: பாஜக கொடுக்கும் மனுவுக்கு நாங்களும் உடன் சென்று ஸ்வாகா பாடிவிட்டு வந்திருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் செயலால் செல்லூர் ராஜூ அதிருப்தியில் இருக்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், என்டிஏ கூட்டணி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. இதன்பின் வரும் நாட்களில் தமாகா, புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் மதுரையில் ஜனவரி 23ஆம் தேதி என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியின் தமிழக அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை காவல் ஆணையர் லோகநாதனிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி ராம சீனிவாசன், பாஜக மாவட்டச் செயலாளர் மாரி சக்கரவர்த்தி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இவர்கள் தலைமையில் மனு அளிக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோரும் வந்தனர். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்பின் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் நக்கலாக ஒரு பதிலை அளித்து சென்றுள்ளார்.
அதன்படி செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எடப்பாடி பழனிசாமி நேர்காணலின் போதே, எங்களிடம் பாஜக தரப்பில் மனு கொடுக்க செல்லும் போது ஒத்துழைக்க அறிவுறுத்தினார். அதனால் மதுரை மாவட்ட நிர்வாகிகள், பிரதிநிதிகள் அனைவரும் பாஜக மாநிலச் செயலாளர் ராம சீனிவாசன் தலைமையில் கொடுக்கின்ற மனுவுக்கு நாங்கள் உடன் சென்று ஸ்வாகா பாடிட்டு வந்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி.. பெரிய சித்திரை திருவிழா மாதிரி மிகப்பெரியளவில் தொண்டர்கள் கூடுவார்கள். எடப்பாடி பழனிசாமி எங்களிடம் முன்னதாக வந்து எங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டமாக இருக்கும். உண்மையான விடியலை 2026ல் எடப்பாடி பழனிசாமி கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புத்தாண்டு தினத்தன்று முதல்வர் மீண்டும் முதல்வராக மீனாட்சியம்மனிடம் வேண்டிக்கொண்டேன் என்று செல்லூர் ராஜூ பேசி இருந்தார். தற்போது பாஜக தலைமையில் மனு கொடுக்க சென்றுவிட்டு, நாங்கள் ஸ்வாகா பாடிவிட்டு வந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். இதனால் செல்லூர் ராஜூ அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications