அதிமுக பக்கம் சாயும் அரசு ஊழியர்கள்.. திமுகவுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்! அதிமுக ’மாஜி’ கணிப்பு..!
மதுரை: மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து விஜய் என வரும் கருத்துக் கணிப்பு எல்லாம் தூள் தூளாக மாறிவிடும் எனவும், C - Voter கருத்துக் கணிப்பில் முதலமைச்சராக வருவது தொடர்பாக மு.க.ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமிக்கு குறைவாகத் தான் போட்டுள்ளார்கள், அதிமுகமாக போட்டால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதற்காக அப்படி போட்டுள்ளார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் அதிமுக பக்கம் இருக்கும் நிலையில், திமுகவுக்கு தோல்வி தான் கிடைக்கும் என கூறியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தினமணி தியேட்டர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," முக ஸ்டாலின், திமுகவின் நெருக்கடியை தாண்டி சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சியை விரல் விட்டு ஆட்டிக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றத்தில் கேட்கின்ற கேள்விகளுக்கு தவறான பதில்களை முதலமைச்சரும், அமைச்சர்களும் சொல்கிறார்கள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் சபையின் மாண்பை காப்பாற்றினார்களா? சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து விட்டு ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்கள்.
C - Voter கருத்துக் கணிப்பில் முதலமைச்சராக வருவது தொடர்பாக மு.க.ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமிக்கு குறைவாகத்தான் போட்டுள்ளார்கள். இதுக்கு பெயர் தான் ஊடு சால் என்பது. அதிகமாக போட்டால் நம்ப மாட்டார்கள் என்று குறைவாக போட்டுள்ளார்கள்.கருத்துக் கணிப்பு தூள் தூளாகிவிடும். மக்கள் தான் எஜமானர்கள்.
நான் அமைச்சர் மூர்த்தி பற்றி தரக்குறைவாக பேசியதாக அவர் சொல்கிறார். நான் எந்த இடத்திலாவது அவர் பெயரை பயன்படுத்தினேனா? அமைச்சர் மூர்த்தி தேவையில்லாமல் ஒரு அனுதாபத்தை தேட பார்க்கிறார். மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெறுவதற்கு அனுதாபமாக பேசுகிறாரா என்று தெரியவில்லை. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிக்கு தான் போட்டி என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறுகிறார். அப்படி என்றால் சட்டமன்றத்தில் இருந்து எங்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள். எங்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள்.
நீங்கள் தான் ராஜா மாதிரி இருக்கிறீர்கள் அல்லவா? ராஜாவாக போகிறீர்களே? உங்கள் மன்னராட்சி தானே நடைபெறுகிறது. ஏன் இப்படி பயப்பட வேண்டும். ஏன் உங்கள் கூட்டணியில் உள்ளவர்களை தா காட்டுகிறீர்கள். திருமாவளவன் மனம் புழுங்கி போயுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு திமுகவை பற்றி பேசாமல் உள்ளதா? எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லை. ஸ்டாலின் காங்கிரஸ் என்று சொல்வதா? செல்வபெருந்தகை ஒருமுறையாவது ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே பற்றி பேசியுள்ளரா? ஸ்டாலின் போல், ஸ்டாலின் போல் என்று பேசுகிறார். நாங்கள் அப்படி இல்லை.எங்கள் கொள்கையில் நாங்கள் சரியாக தான் உள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சரியாக உள்ளார்.
திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்பது சுத்த பொய். அது சூட்கேஸ் கூட்டணி. நடிகர் விஜய் தற்போது தான் களத்திற்கே வந்திருக்கிறார். தனது தொண்டர்களை உற்சாகப்படுத்த அவர் என்ன வேணாலும் பேசலாம். திமுகவை பற்றி தான் அவர் பொதுக்குழுவில் பேசி இருக்கிறார். அதிமுகவை பற்றி பேசவே இல்லை. கூட்டணியை பொறுத்த வரை இன்னும் காலம் இருக்கிறது. நாங்கள் யாருடைய கூட்டணிக்காகவும் காத்திருக்கவில்லை. யாரும் போய் விடக்கூடாது என சூட்கேஸ் கொடுக்கவில்லை. கூட்டணி பற்றி கற்பனையாக சொல்ல முடியாது.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். மக்களை பொறுத்தவரை எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், எங்களுக்கு வாக்களிக்க தயாராகி இருக்கிறார்கள். விவசாயிகளும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரிப்பதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தேர்தல் வியூகத்தை பார்த்து கதறுபவர்கள் குழப்பம் விளைவிக்க வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது" என்றார்.












Click it and Unblock the Notifications