டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூரில் கடையடைப்பு- போலீஸ் தடையை மீறி பேரணியால் பதற்றம்!
மதுரை: வேதாந்தா குழுமத்தின் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்டம் மேலூரில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலூர் நரசிங்கம்பட்டியில் இருந்து தல்லாகுளம் நோக்கி போலீசார் தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக செல்ல முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த சுரங்க அனுமதிக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழ்நாடு சட்டசபையிலும் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தீர்மானத்தில், இன்றியமையாத கனிமங்களின் உரிமையை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு ஏலம் விடக் கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இதையும் மீறி ஏல நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது; டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோவில்கள், சமண சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள், பஞ்ச பாண்டவர் படுகைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களையும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அரிட்டாபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை அப்பகுதி கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். உண்ணாவிரதம், நடைபயணம், ஆர்ப்பாட்டம் என ஒவ்வொரு நாளும் அரிட்டாபட்டி சுற்றுவட்டார மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மேலூரில் முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இன்று காலை 6 மணி முதல் மேலூர் நகரம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் நரசிங்கம்பட்டி என்ற இடத்தில் இருந்து மதுரை தல்லாகுளம் நோக்கி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக பேரணியாகவும் செல்ல பொதுமக்கள் முயன்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அப்பகுதியில் போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications