“அறிவு பசிக்கு ஓர் இடம்; ஆஹா சந்தோஷம்” - கலைஞர் நூலகம் பற்றி சாலமன் பாப்பையா
மதுரை: மிக பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவந்த மதுரை 'கலைஞர் நூற்றாண்டு நூலக'த்தின் வேலைகள் நிறைவடைந்துள்ளன. இதன் திறப்பு விழா நாளை நடைபெறும் நிலையில், புத்தகங்களை அடுக்கும் பணிகள் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ளன.
மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ளது, 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்'. 2010 ஆம் ஆண்டு அண்ணாதுரை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி சென்னையில் 'அண்ணா நூற்றாண்டு நூலக'த்தை கட்டினார். இதனை சிங்கப்பூர் நூலகத்தை மாதிரியாகக் கொண்டு அவர் கட்டினார். ஆசியாவிலேயே 2ஆவது மிகப் பெரிய நூலகம் என்று இதைச் சொல்கிறார்கள்.

ஆகவே அதனை மனதில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கலைஞர் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் கலைஞர் நூலகத்தை சுமார் 99 கோடி ரூபாய் செலவில் கட்ட கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டார்.
மொத்தம் 121 கோடி ரூபாய் : மேலும் நூலகத்திற்கான புத்தகங்களைக் கொள்முதல் செய்ய 10 கோடி ரூபாயும், தொழில்நுட்ப உபகரணங்களை அமைக்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 2 இலட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில், கீழ்த்தளம், தரை தளம் என மொத்தமாக ஆறு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை நாளை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக அவர் மதுரை செல்கிறார்.

மதுரை மண்ணின் மைந்தர்களான கரு பழனியப்பன் மற்றும் சாலமன் பாப்பையா ஆகிய இருவரிடம் கலைஞர் நூலகம் பற்றிக் கேட்டோம். முதலில் நம் லைனுக்கு வந்தவர் கரு பழனியப்பன். "மதுரையின் நட்ட நடுப் பகுதியான சிம்மக்கலில் வளர்ந்தவன் நான்.
இந்த மாவட்டத்தின் மைய நூலகம் சிம்மக்கலில்தான் இருந்தது. இந்த நூலகத்தில்தான் நான் முதன்முதலாக வார இதழ்கள், மாத இதங்களை எல்லாம் படிக்கத் தொடங்கினேன்.
குறிப்பா 1989 அல்லது 1990 கால பகுதிகளில் நடந்த விஷயங்களை நான் சொல்கிறேன். பள்ளிக்கூட நூலகங்களில் புழங்கிவிட்டு மாவட்ட நூலகத்திற்கு வந்தபோது இது மிகப் பெரியதாகத் தோன்றியது. இன்றைக்கு அதைத் தாண்டி மிக பிரம்மாண்டமான சர்வதேசத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறக்கிறார்கள். இதை நினைக்கும்போது மிக மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

அரசு இந்த ஒரு நூலகத்துடன் நின்றுவிடாமல், இன்னும் 3 ஆண்டுகள் ஆட்சிக்காலம் உள்ளது... ஆகவே குறைந்தது மாவட்டத்திற்கு ஒரு நூலகம் இதை மாதிரி திறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதாவது லட்சியம் 39; நிச்சயம் 6 என இலக்கு வைத்து இந்தக் காரியத்தை திமுக அரசு செய்துதர வேண்டும்" என்று கவித்துவமாகப் பேசியவர் மீண்டும் தொடர்ந்தார்.
"கலைஞர் பெயரில் நூலகம் திறப்பது பொருத்தமான விஷயம்தான். கடைசிவரை எழுதிக் கொண்டே இருந்தவர் அவர். எனது பேராசிரியர், 'நூறு பக்கம் படித்தால்தான் நீ ஒரு பக்கம் எழுதலாம்' என்பார். எங்களது அமெரிக்கன் கல்லூரியில் வகுப்பெடுக்கும்போது E. E. Cummings என்ற கவிஞரைப் பற்றிச் சொன்னார் பேராசிரியர்.

கலைஞர் பெயரில் நூலகம்: இவரைச் சொல்லும்போது வால்ட் விட்மன் குறிப்பிட்டுவிட்டு, 'புதுக்கவிதையை இவர்தான் துவங்கிவைத்தார். அவரே, ' எளிய வடிவத்தின் காரணத்தால், புதுக்கவிதை படிப்பவர்களைவிட எழுதுகின்றவர்கள் அதிகமாகி விடுவார்கள். காலப்போக்கில் அது நீர்த்துப்போய்விடும்' என்று சொல்லி இருக்கிறார். அப்படி இல்லாமல் தமிழில் புதுக்கவிதைகள் துவங்கியபோதே ரொம்ப அடர்த்தியாக எழுதியவர் நீலமணி' என்றும் விளக்கிச் சொன்னார் பேராசிரியர்.
ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்த எனக்கு நீலமணி என்ற பெயர் புதியதாக இருந்தது. நீலமணி யார் எனத் தேடினேன். எங்கள் அமெரிக்கன் கல்லூரி நூலகத்திலும் அவர் கவிதைப் புத்தகம் இல்லை. மாவட்ட நூலகத்திலும் இல்லை. கவிஞர் மீரா நடத்தி வந்த அன்னம் என்ற பதிப்பகம் போய் வாங்கி படித்தேன். அதன்பின்னர் நூலகத்திற்கு நீலமணி புத்தகத்தை வாங்கினார்கள்.

இப்படி எல்லாம் படித்து வளர்ந்த எங்களுக்கு எங்கள் ஊரில் இவ்வளவு பெரிய நூலகம், அதுவும் கலைஞர் பெயரில் வருகிறது என்றால் சும்மாவா?" என்கிறார் பழனியப்பன்
அடுத்துப் பேசிய சாலமன் பாப்பையா, "மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வருகிறது. அதனை நினைக்கும்போதே மனதிற்குள் மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆய கலைகள் 64 என்று நாம் சொல்கிறோம். உலகத்தில் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

ஆகவே நாம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. அந்த அறிவியல் வளர்ச்சியை நாம் எப்படிக் கற்றுக்கொள்ள முடியுமா? புத்தகங்கள் மூலமாகத்தான் கற்றுக்கொள்ள முடியும். வசதிபடைத்தவர்கள் நூல்களை வாங்கிப் படிக்கிறார்கள். ஆனால், ஏழைகள்? அவர்களுக்குப் புத்தகம் வாங்கிப் படிக்கும் அளவுக்குப் பொருளாதார சக்தி இல்லை.
அப்படியே ஒரு நூலைக் காசு கொடுத்து வாங்கினால், வீட்டில் அமைதியான சூழலில் உட்கார்ந்து படிக்கும் அளவுக்கு இடவசதி இருக்குமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. இதற்கு இறுதியா விடை என்ன? எந்த வசதியும் இல்லை என்பதுதான்.

ஏழைகள் என்ன செய்வார்கள்?: நான் எனது சிறுவயது காலம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு நிறையப் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், வீட்டில் புத்தகம் வாங்கித்தரும் அளவுக்கு யாரும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால் வீட்டில் வசதியில்லை. பள்ளிக்கூடங்களில் நூலகம் இருந்தது. அதைப் போய் பார்க்கலாம். அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம். ஆனால், வீட்டுக்குக் கொண்டுவந்து படிக்க முடியாது. தர மாட்டார்கள்.
வீட்டுக்குப் புத்தங்களைக் கொண்டுவந்தால் கிழித்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் ஆசிரியர்கள் தரமாட்டார்கள். அன்றைக்கு எங்கள் ஊரில் தனியார் நூலகங்கள் சில இருந்தன. ஆனால், அதற்கு நாம் பணம் கட்டவேண்டும். அந்த வசதி அந்தக் காலத்தில் எங்கள் குடும்பத்தாருக்கு இல்லை.

வேறு நண்பர்கள் யாரேனும் பணம் கட்டி வாங்குவார்கள். அவர்களிடம் கேட்டு வாங்கி படிப்போம். அதுவும் துப்பறியும் நாவல் புத்தகங்கள், விஞ்ஞானம் என துறைசார்ந்த புத்தங்கள் கிடைக்காது. நான் படித்த மதுரை தியாகராஜர் கல்லூரியில் நூலகம் இருந்தது. 2 நூல்கள் எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் வைத்துப் படிக்கலாம். எங்களுக்கு அன்றைக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை.
ஆனால், இன்றைக்குப் பாருங்கள். நிறைய வாய்ப்புகள் உருவாகி உள்ளன. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வெளியிலிருந்துதான் பார்த்தேன். எவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டிடமாக அது உள்ளது. அதைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை. அத்தனை சிறப்பாக அதைக் கட்டி இருக்கிறார்கள்.
அந்த நூலகத்தில் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளார்கள் என அறிகிறேன். சின்ன வயது முதல் பெரியவர்கள் வரை துறைவாரியாக நூல்களை எடுத்துப் படிக்கக்கூடிய வகையில் அதை, மேல்நாட்டுத் தரத்திற்கு நிகரான வசதிகளுடன் உருவாக்கி உள்ளார் முதல்வர் மு. க.ஸ்டாலின் என்றார்கள்.

புத்தகம் வாங்கலாம்; படிக்க இடம்?: மேற்கே கம்பம், கூடலூரிலிருந்து அப்படியே தேனி வந்து, அங்கிருந்து சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் என அப்படியே ஒரு சுற்றி வந்தால், திண்டுக்கல் திரும்ப தேனி என இந்தச் சுற்றுப்பாதைக்குள் எத்தனை கிராமங்கள் இருக்கின்றன? அதற்குள் எத்தனைப் பட்டதாரிகள் இருக்கிறார்கள்? எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்? இவர்கள் எல்லாம் தங்களின் அறிவு பசிக்காகத் தேடி எந்த நூலகத்திற்குச் செல்வார்கள்? இவர்களை எல்லாம் மனதில் கொண்டுதான் இந்த மதுரை கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்குச் சொத்தை சேர்த்துக் கொடுப்பார்கள். அது சண்டையைக் கொண்டுவந்து கொடுக்கும். ஆகவே, ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு ஞானத்தைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அது புத்தகத்தில்தான் உள்ளது. அதற்காகத்தான் இந்த நூலகம்.
அந்தக் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் என்ற ஒன்று பீகாரில் இருந்திருக்கிறது. அங்கே மிகப் பெரிய நூலகம் ஒன்றும் இருந்திருக்கிறது. அங்கே படிப்பதற்காகச் சீனாவிலிருந்து பலர் வந்திருக்கிறார்கள். எகிப்து நாட்டில் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகம் என ஒன்று இருந்திருக்கிறது. அங்கேயும் மிகப் பெரிய நூலகம் இருந்துள்ளது.

இப்படி மேலை நாட்டில் உள்ள சில நூலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கே உள்ள வசதிகளை எல்லாம் பார்த்தால், மலைப்பு ஏற்படுகிறது. இந்த நூலகத்திற்குள் எல்லாம் செல்லும் போதுதான் நம் பாட்டி சொன்ன 'கற்றது கைமண் அளவு' என்ற வாசகம் நினைவு வருகிறது.
கோயிலுக்குள் சென்று வரும்போது நான் ஆன்ம நிறைவோடு வருகிறேன். ஆனால், நூலகத்திற்குள் சென்று திரும்பும்போது எனது அறிவு எவ்வளவு சிறியது என்ற நினைப்போடு வருகிறேன். அந்த அளவுக்கு அறிவுப் புதையல்களை உள்ளே குவித்து வைத்துள்ளன, நூலகங்கள்.
எனவேதான் நம் முதல்வர் மு. க. ஸ்டாலின் இத்தனை பெரிய வசதிகளுடன் ஒரு சர்வதேச தரத்தில் இந்தக் கலைஞர் நூலகத்தைக் கட்டி தந்துள்ளார்." என்கிறார் சாலமன் பாப்பையா.
மதுரையில் 121 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நாளை (ஜூலை 15) தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications