மதுரை ஏர்போர்ட்டுக்கு.. முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி தர்ணா... பரபரப்பு
Recommended Video
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக்கோரி அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முன்பு ஸ்ரீ தர் வாண்டையார் தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் ஸ்ரீதர் வாண்டையாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

வலியுறுத்தல்
மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக்கோரி பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் தேவர் அமைப்புகளை நடத்தி வரும் தலைவர்கள். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த கோரிக்கையை வலியுறுத்தி நிறைய போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன.

கோரிக்கை முழக்கம்
இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர் ஸ்ரீ தர் வாண்டையார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் அதிகாரிகள்
இதையடுத்து அங்கு வந்த மதுரை மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் ஸ்ரீதர் வாண்டையாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தர்ணாவில் ஈடுபடுவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் மட்டும் ஈடுபட்ட ஸ்ரீதர் வாண்டையார், முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்.

எச்சரிக்கை
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பசும்பொன் கிராமத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications