லிஸ்ட்டே இருக்கு.. அதிமுகவில் வளர்ந்தவர்களை அபகரித்துக்கொண்டு இப்படி பேசலாமா? - உதயகுமார் கேள்வி!
மதுரை : அதிமுக தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை, நெருக்கடி கொடுத்து அபகரித்து தன் அருகில் வைத்துக் கொண்டு, அதிமுக கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது என்று முதலமைச்சர் பேசலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திமுக அரசை விமர்சிக்கிறார்கள் எனப் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
திமுகவை விமர்சிக்க அதிமுகவிற்கு தகுதி இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்தவர்களை திமுக அபகரித்து வைத்துக்கொண்டதாக ஒரு பட்டியலையும் குறிப்பிட்டுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.

அதிமுகவுக்கு தகுதி கிடையாது
நேற்று கோவை மாவட்டத்தில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின், சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு திமுக அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ, கிஞ்சிற்றும் கிடையாது எனப் பேசினார்.

ஆட்சியின் அவல நிலை
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியின் அவல நிலை, நிர்வாக சீர்கேட்டு, மக்கள் விரோதப் போக்கு, அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாதது, அம்மா திட்டங்களுக்கு மூடு விழா, 150 சதவீத சொத்து வரி உயர்வு, 52 சகவீத மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீரழிவு, காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்று ஆதாரத்துடன் புள்ளிவிபரத்துடன் தொடர் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஆட்சியின் அவல நிலையை எடுத்துக் கூற எதிர்க்கட்சித் தலைவருக்கு தார்மீக உரிமை உண்டு. ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் நான் பலமுறை விமர்சனங்களை எதிர்கொண்டு வளர்ந்தவன் என்று கூறுகிறார். ஆனால் தற்போது அதிமுக கேள்வி கேட்பதற்கு எந்த தகுதி இல்லை என்று கூறியுள்ளார்.

அபகரித்து விட்டீர்கள்
அதிமுகவில் பயிற்சி பெற்று, அதனால் வாழ்வு பெற்று, அதிகாரம் பெற்று, தன் கையில் பச்சை குத்தி கொண்டு இருந்தவர்களை காலத்தின் கோலத்தால், தொண்டர்களின் உழைப்பால் கோபுர கலசத்தில் உயர்ந்தவர்களை நீங்கள் அபகரித்ததை என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும். உதாரணமாக எ.வ.வேலுவில் தொடங்கி செல்வகணபதி, கே கே எஸ் எஸ் ஆர், முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கம்பம் செல்வேந்திரன், சத்தியமூர்த்தி, தென்னவன், ரகுபதி,பழனியப்பன், தங்க தமிழ்ச்செல்வன் தற்போது செந்தில் பாலாஜி வரை பட்டியலிட்டு சொல்ல முடியும். அதிமுக தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்தவர்களை, நெருக்கடி கொடுத்து அபகரித்து தன் அருகில் வைத்துக் கொண்டு, அதிமுக கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது என்று முதலமைச்சர் கூறலாமா?

சர்வாதிகார பாதையில்
அதிமுக 50 ஆண்டுகால பொன்விழாவில், 30 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்காக சேவை செய்தது, எம்.ஜி.ஆர் இருக்கும்போது திமுகவை கோட்டை பக்கம் வரவிடாமல் தோல்வியைதான் பரிசாக வழங்கினார். ஏழு முறை ஆட்சி செய்த இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அதனை தொடர்ந்து எடப்பாடியார் இந்த இயக்கத்தை வலிவோடும் பொலிவோடும் நடத்தி வருகிறார். அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று முதலமைச்சர் கூறுவது ஜனநாயகப் பாதையில் இருந்து சர்வாதிகார பாதையில் பயணிக்க தொடங்கி விட்டாரா என்ற கேள்வி வருகிறது.

உழைப்பால் உயர்ந்தவர்
திமுகவில் பயிற்சி பெற்றவர்களை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்யவில்லை, முதலமைச்சர் அதிமுகவை விமர்சனம் செய்ததற்கு கழகத் தொண்டர்கள் எல்லாம் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது ஜெயலலிதாவும் சரி, எடப்பாடியாரும் சரி எதிர்கட்சிக்குரிய மரியாதையை வழங்கினார்கள். இன்றைக்கு 48 ஆண்டுகால பொது வாழ்க்கையில் எடப்பாடியார் உங்களைப் போன்ற தந்தையின் மடியில் தவழ்ந்து அதிகாரம் பெறாமல் தன் தியாகத்தால், உழைப்பால், விசுவாசத்தால் கிளைக் கழக செயலாளராகத் தொடங்கி முதலமைச்சர் ஆனார், தற்போது இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை எடப்பாடியார் கேட்கிறார்.

அதிகாரப்போட்டி
ஆனால் அதற்கு முதலமைச்சர் அதிமுகவில் அதிகாரப் போட்டி என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வண்ணம் பொத்தாம் பொதுவாக பேசுகிறார். திமுகவிலும் அதிகார போட்டி இருந்தது ஏன் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் அதிகாரப் போட்டி இல்லையா, அதேபோல் வைகோ அதிகார போட்டியால் திமுகவில் இருந்து செல்லவில்லையா, பேறிஞர் அண்ணா காலம் தொடங்கி எத்தனை அதிகார போட்டிகள் நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியாதா? முதலமைச்சர் ஏகடியமாக பேசுகிறார்.

ஏகடியம் பேசுறீங்க
இன்றைக்கு ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வாக்களித்து எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடியார் உள்ளார், நீங்கள் கொங்கு மண்டலம் சென்றபோது, அங்கே கூட்டத்தை கூட்ட நீங்கள் செய்த ரகசியங்களை நடுநிலை நாளிதழ்கள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி உள்ளன. ஆனால் இன்றைக்கு எடப்பாடியாரும் சென்றார். அங்கு இயற்கையான கூட்டம் கூடியது. எடப்பாடியார் கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலை, அறிந்த பதிலை கூறவேண்டும். ஆனால் ஜனநாயக கடமை ஆற்றாமல் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஏகடியம் பேசுவதை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய நாகரிகம், கண்ணியம் இப்போது இல்லாமல் போனது ஏன்? இது போன்ற பேச்சை மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications