ஸ்டாலின் யார்? ‘தமிழ்நாட்டுக்கு ராஜா’ - மழலைக் குரல்.. மணிமகுடம்.. மொத்தமா பிடிச்சிட்டாரு முதல்வர்!
மதுரை : 'ஸ்டாலின் ஐயா.. தமிழ்நாட்டுக்கு ராஜாவா இருக்காரு' என மழலைக் குரலில் பள்ளிச் சிறுமி கூறும் காட்சி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'காலை உணவு' வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, பள்ளிக் குழந்தைகளுக்கு உணவை ஊட்டிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
ஸ்டாலினால் உணவு ஊட்டிவிடப்பட்ட சிறுமி ரித்திகா தான், 'ஸ்டாலின் ஐயா ஊட்டிவிட்டாங்க..' என மகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார். ஸ்டாலின் என்னவாக இருக்கிறார் எனக் கேட்டதற்கு 'ராஜாவா இருக்காரு' என பதில் அளித்திருக்கிறார் அந்தச் சிறுமி.
'காலை உணவுத் திட்டம்' முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனை மணிமகுடத்தில் வைர மணியாக ஜொலிக்கப்போகிறது, வரலாற்றில் இடம்பிடிக்கப்போகிறது என்பதற்கான அத்தாட்சியே, அந்தச் சிறுமியின் பேச்சு என உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள் உடன்பிறப்புகள்.

தொடங்கி வைத்த ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். காலை உணவாக கேசரி, ரவா கிச்சடி வழங்கப்பட்டது. அங்கிருந்த குழந்தைகளுடன் அமர்ந்து உணவைச் சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அருகில் இருந்த சிறுமிக்கு உணவை ஊட்டிவிட்டு மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வாழ்வின் பொன்னாள்
இந்த திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பள்ளிக்கு பசியோடு படிக்க வரும் மாணவர்களுக்கு முதலில் உணவு வழங்கிவிட்டு பின் வகுப்பறைக்கு செல்லக் கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளோம். இது எனது வாழ்வின் பொன்னாள். சென்னையில் ஆய்வின் போது மாணவர்களை சந்தித்து கேட்டபோது ஏராளமான குழந்தைகள் பசியோடு காலையில் பள்ளிக்கு வருவதை உணர்ந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். பசித்த வயிற்றுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டிகளாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணை வடிவமான திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு
1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி தலைவரான பிட்டி தியாகராயர், சென்னையில் தொடங்கிய மதிய உணவு திட்டம், இன்று மதுரையில் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. அவர் தொடங்கிய இந்த திட்டம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு ஆங்கில அரசால் சில காரணங்களை சொல்லி நிறுத்தப்பட்டது. பின்னர் 1957-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். பின்னர் சத்துணவு திட்டமாக்கினார் எம்.ஜி.ஆர். அதை திமுக அரசும் விரிவுபடுத்தியது.

ஆட்சியின் முகம் இது
பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று நான் எண்ணியதால் இந்த திட்டத்தை செயல்படுத்தினேன். இத்திட்டத்தை சலுகை, இலவசம் என எண்ணக்கூடாது. இது அரசின் கடமை. பசிப்பிணி நீங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருவார்கள். இதனால் கல்வி மேம்படும். இதற்கான நிதியை செலவாக நினைக்கவில்லை. இத்திட்டத்தை ஆட்சியின் முகமாக பார்க்கிறேன். கலைஞரின் மகனின் அரசு கருணையின் வடிவான அரசு. தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்கள் , பணியாளர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு உணவு வழங்குவது போல பாசத்தோடு உணவுகளை வழங்குங்கள்.

நீங்க படிங்க.. நான் இருக்கேன்
கல்வி போராடிப் பெற்ற உரிமை. கல்வி உங்களிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து என்று உணர்ந்து நன்கு படிக்க வேண்டும் . நன்கு படியுங்கள். படிக்காமல் முன்னேறலாம் என்று கூறுபவர்களை முட்டாள் என கூறுங்கள். நீங்கள் படியுங்கள், நான் இருக்கிறேன். பசிப்பிணி போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் சிக்கல்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆதிமூலம் பள்ளியில் இருந்து காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

ஸ்டாலின் மணிமகுடத்தில் வைரக்கல்
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் போற்றப்பட்டு வருவது போல், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அமையப்போகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பள்ளிக் குழந்தைகளின் பசி போக்கும் இந்தத் திட்டம் வரலாற்றில் இடம்பெறும் எனக் கட்டியம் கூறுகிறார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட காலை உணவு திட்டமானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ராஜா
இந்த நிலையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவுக்குப் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் உணவூட்டிய மாணவர்கள் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். அதில் ரித்திகா என்ற சிறுமியிடம் செய்தியாளர் ஒருவர் "உன் கூட பேசுனவர் யார்?" என்று கேட்க, அதற்கு அந்தக் குழந்தை "முதல்வர் ஸ்டாலின்" என்று பதிலளிக்கிறது. "அவர் யாரு? தமிழ்நாட்டுக்கு என்னவா இருக்கார்?" என்று செய்தியாளர் மீண்டும் கேட்க, "அவர் தமிழ்நாட்டுக்கு ராஜாவா இருக்காரு" என்று சிறுமி பேசியுள்ளார்.

ட்ரெண்ட்
மேலும், அந்த மாணவி தன்னிடம் முதல்வர் ஸ்டாலின், தன்னைப் பற்றியும், சாப்பாடு பற்றியும் விசாரித்தது குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. 'தமிழ்நாட்டுக்கு ராஜா' என்ற கேப்ஷனோடு பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், #TNBreakfast எனும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகியுள்ளது.












Click it and Unblock the Notifications