கொட்டித்தீர்த்த கனமழை.. நிறைந்த தேவன்குறிச்சி கண்மாய்.. பெருக்கெடுத்த வெள்ளம்.. பாதுகாக்க கோரிக்கை
மதுரை: தென் மாவட்டங்களில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதியில் தொடங்கினாலும் நவம்பர் மாத பிற்பகுதியில் தீவிரமடைந்தது. டிசம்பர் மாத துவக்கத்தில் வட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்தது. டிசம்பர் மாத பிற்பகுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் பெய்த அதீத கனமழையால் அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் விடாமல் பெய்த மழையால் கண்மாய்கள், குளங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது.
மதுரை மாவட்ட வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 7 ஆம் தேதி வாக்கில் பரவலாக இடியுடன் கூடிய மழையாக இருக்கும். தேனி, நெல்லை மற்றும் கொடைக்கானல் மலை பகுதிகளில் கன மழை இருக்கும். மதுரை மண்டலத்தில் 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்யும். அது வரை ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மிதமான மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெய்த கனமழையால் மதுரை மாவட்டத்தில் டி. கல்லுப்பட்டி,தேவன்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் சிறப்பு வாய்ந்தது. மலைச்சரிவில் இயற்கையாக அமைந்த பாறையை வெட்டி இக்கண்மாய்க்கு மடை அமைத்துள்ளனர்.
இதில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைப்பு உள்ளது. இதன் முதல் கண்ணில், தரையில் பதிக்கப்பட்டுள்ள 3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் 7 வரிகள் கொண்ட கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. 'கலிங்கத்தரையர் பெயர் கொண்ட பெருங்குன்றைப் பெரியகுளம்' என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இக்கண்மாய் மற்றும் மடை கலிங்கத்தரையரால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகக் கருதலாம்.
கலிங்கத்தரையர் என்பவர்கள் பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த குறுநிலத் தலைவர்கள் ஆவர். கல்வெட்டில் சொல்லப்படும் கலிங்கத்தரையர் இப்பகுதியில் இருந்த குறுநிலத் தலைவராக இருக்கலாம். இக்கண்மாய் அமைத்த அவருடைய சிறப்பை கல்வெட்டு விவரிக்கிறது. இதில் மன்னர் பெயர் அழிந்துள்ளது. கல்வெட்டில் கார் கொண்ட நிறத்தான், இன்னோசை, கடலிடத்தே போன்ற சொற்களும் வருகின்றன.
இம்மடையின் மேற்கு பகுதியில் உள்ள பாறையில் திரிசூலம், சூரியன், சந்திரன், பாண்டியரின் செண்டுக்கோல் ஆகியவை கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளன. மடையை அமைத்து கொடுத்து, சந்திரனும் சூரியனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்பட்டுள்ளன.
தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் செங்குடி நாட்டு பெருங்குன்றத்தூர் எனவும், இங்குள்ள குன்று பெருங்குன்றம் எனவும், இவ்வூர் கண்மாய் பெரியகுளம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் 'பெருங்குன்றைப் பெரியகுளம்' என சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டுகள் சிறப்பு கொண்ட இந்த கண்மாயில் நிரம்பும் நீரினால் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயம் செய்யப்படுகிறது. பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இந்த கண்மாய் அதிக அளவில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால் நீர் நிரம்பவே விடுவதில்லை. கண்மாயை ஆக்கிரமித்து பலரும் வீடுகளை கட்டியுள்ளதால் தண்ணீர் தேங்க விடாமல் தடுக்கின்றனர். இதன் காரணமாக விவசாயம் என்பது தேவன்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கேள்விக்குறியாகியுள்ளது.
நீர்நிலைகளை பாதுகாக்கும் தமிழக அரசு தேவன்குறிச்சியில் உள்ள ஈஸ்வரப்பேரி கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயம் செழிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தேவன்குறிச்சி சுற்றுட்டார பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications