மதுரைக்கு விரைவில் 4 வழிச்சாலை.. தமிழக அரசு அனுமதி.. மீனாட்சி அம்மன் கோயில் பறக்கும் பாலம் வருமா?
மதுரை: மதுரை நெல்பேட்டை முதல் விமான நிலையம் வரை உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கி உள்ளது. அதேநேரம் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பறக்கும் பாலம் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.
மதுரை விமான நிலையம் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பெருங்குடியில் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் விமான நிலையம் அமைந்திருப்பதால், மதுரை நகருக்குள் இருந்து விமான நிலையத்திற்கு வருவோர், அதிகப்படியான போக்குவரத்து நெரிசலில் சிக்குகிறார்கள்.

மதுரைக்கு இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக மதுரை மட்டுமின்றி மதுரையை சுற்றியுள்ள, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விமானங்களில் ஏறவும் இறங்கவும் மதுரை விமான நிலையத்தை தான் பயன்படுத்துகிறார்கள். விருதுநகரை தவிர தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் என எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை விமான நிலையத்தை அடைய வேண்டும் என்றாலும் மதுரைக்குள் வந்துதான் வர வேண்டும்.
மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கல்வி நிறுவனங்கள், பல்வேறு தனியார் மருத்துவமனைகள், பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்தள்ளதால் நாள்தோறும் விமானங்களில பலர் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை விமானநிலையத்திற்கு அதிகமான பயணிகள் வந்து செல்லும் இடமாக திகழ்கிறது. கிட்டத்தட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விமான பயணம் என்பது மதுரையாகவே உள்ளது.
மதுரைக்கு வரும் விமான பயணிகள் ஆகட்டும், மதுரை நகருக்குள் இருந்து வரும் விமானப் பயணிகள் ஆகட்டும், அவர்களில் பலர் நெல்பேட்டை-அவனியாபுரம் சாலை வழியாகதான் பெருங்குடி விமான நிலையத்திற்கு வருகிறார்கள். ஆனால், இந்த சாலை இரு வழிச்சாலையாக குறுகலாக இருக்கிறது. இதனால் விமானப் பயணிகள் விமானங்களை பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
அதுபோல் வெளிநாடுகள், நகரங்களில் இருந்து விமானங்களில் வந்திரங்குவோர் நெல்பேட்டை, தெற்குவாசல் போக்குவரத்து நெரிசலை தாண்டி நகரத்திற்குள் வந்து செல்வதும் கடினமாக இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நெல்பேட்டையில் இருந்து வில்லாபுரம் வழியாக அவனியாபுரம் வரை 5 கி.மீ., பறக்கும் பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்திருந்தது...
ஆனால் நெல்பேட்டை, தெற்குவாசல், அவனியாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்பையும் மீறி இந்த திட்டத்தை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால், திடீரென்று இந்த பறக்கும் பாலம் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி நான்கு வெளி வீதிகளில் புதிய மேம்பாலங்கள், உயரமான கட்டிடங்கள் எதுவும் தற்போது கட்டக்கூடாது என்ற விதிமுறை உள்ள காரணத்தால் இந்த திட்டத்தை அதிகாரிகள் கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேநேரம் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை பறக்கும் பாலத்திற்கு பதிலாக நெல்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை உள்ள இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அமைப்பதற்கு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் விமான நிலையம் செல்வது எளிதானதாக மாறும்.












Click it and Unblock the Notifications