“வண்டியில ஏறும்மா” நீட் தேர்வு மையத்தில் தவித்த மாணவியை நெகிழவைத்த காவல்துறை! இதான் தமிழ்நாடு போலீஸ்
மதுரை: நீட் தேர்வு மையங்களில் பரிதவித்த மாணவ மாணவிகளுக்கு கை கொடுத்து உதவி உள்ளனர் தமிழக காவல்துறையினர். நீட் தேர்வு எழுத வந்த மாணவர் ஆதார் கார்டை எடுத்து வர மறந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உடனடியாக அவரது பெற்றோருக்கு போன் போட்டு கொடுத்து உரிய நேரத்தில் தேர்வு எழுத உதவியுள்ளார் மதுரை கூடல் புதூர் காவலர் விஜயலட்சுமி.
கோவையில், நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு ஆதார் அட்டையை டவுன்லோடு செய்து போலீசார் ஓடி வந்து கொடுத்துள்ளனர். அதேபோல, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேர்வு மையம் எது என தெரியாமல் குழப்பத்தில் இடம் மாறி வந்த மாணவியை போலீசாரே ஜீப்பில் அழைத்துச் சென்று உரிய நேரத்தில் தேர்வு மையத்தில் விட்டுள்ளனர்.

நீட் தேர்வு
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ மாணவியர் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த வாரம் ஹால்டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன.
இதையடுத்து தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. இந்த தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு மாணவ மாணவியர் விடை அளிப்பார்கள். 11.30 மணி முதலே தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையின் புதுப்பிக்கப்பட்ட நகலை மையத்திற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மாணவ மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்
நீட் தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலை முடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த பதற்றத்தோடு தேர்வு மையங்களில் காத்திருந்தனர்.
பல தேர்வு மையங்களில் மாணவர்கள் பதற்றத்தில் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவில்லை. மேலும், ஆடைக் கட்டுப்பாடுகளாலும் மிகுந்த மன உளைச்சல் அடைந்தனர். பல மையங்களிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவ மாணவிகளுக்கு உதவினர்.
உதவிய மதுரை போலீஸ்
மதுரையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர் ஆதார் கார்டை எடுத்து வர மறந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உடனடியாக அவரது பெற்றோருக்கு போன் போட்டு கொடுத்து உரிய நேரத்தில் தேர்வு எழுத உதவியுள்ளார் மதுரை கூடல் புதூர் காவலர் விஜயலட்சுமி.
கோவையில், நீட் தேர்வு எழுத வந்த மாணவர், ஆதார் அட்டை நகலை கொண்டு வர மறந்துள்ளார். இதனால் பதற்றத்தில் செய்வதறியாது திகைத்த மாணவரிடம் விவரங்களை கேட்டறிந்த போலீசார், அந்த மாணவரின் ஆதார் அட்டையை டவுன்லோடு செய்து ஓடி வந்து கொடுத்துள்ளனர்.
போலீஸ் ஜீப்பில் மாணவியை அழைத்துச் சென்று
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நீட் தேர்வு மையத்திற்கு இடம் மாறி வந்த மோகனாஸ்ரீ என்ற மாணவியை தனது காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று தக்க நேரத்தில் உதவியுள்ளார் காவல் ஆய்வாளர் தவமணி. ஹால் டிக்கெட்டில் இருந்த சரியான தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் அழைத்துச் சென்று அந்த மாணவியை தேர்வு எழுத வைத்துள்ளார்.
இதேபோல, திருப்பூர் திருமுருகன்பூண்டியில் மாணவியின் உடையில் நிறைய பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவரை தனது வண்டியிலேயே ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்து தேர்வு மையத்தில் கொண்டு வந்து விட்டுள்ளார் பெண் காவலர் ஒருவர்.












Click it and Unblock the Notifications