1000 காளைகள்.. 350 காளையர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி! உற்சாகம்
மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்த நிலையில் அதனை உற்சாகமாக வீரர்கள் பிடித்தது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும் கூட மதுரை மாவட்டத்தில் நடக்கும் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை.
அதன்படி மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. 2வதாக பாலமேட்டில் நேற்று நடந்தது. இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில். வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கம், விஐபி கேலரி, பரிசுபொருள் மாடம் உள்பட மாடுகளுக்கு தேவையான ஏற்பாடுகள் தயாராகின. இந்த போட்டியை முதல்வர் முக ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

1000 காளை-300 வீரர்கள்
வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய தொடங்கின. வீரர்கள் உற்சாகமாக சீறிப்பாய்ந்த காளைகளை பிடித்தனர். இந்த போட்டியை கேலரியில் அமர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்பட நிர்வாகிகள் பலர் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 350 வீரர்களும் களம் காண்கின்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆவணங்கள் சரிபார்க்கபட்டு, உடற்தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறங்க உள்ளனர். வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

கார்கள் பரிசு
அதன்படி தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட உள்ளது. சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் வழங்கப்பட உள்ளது. போட்டியில் 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, காளை உரிமையாளருக்கும் தலா ஒரு பைக்குகள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க 2 எஸ்பிக்கள், 8 உதவி எஸ்பிக்கள், 29 டிஎஸ்பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications