பாஜக மாநில தலைவர் மாற்றம்? வந்து விழுந்த கேள்வி.. தமிழிசை தந்த பதில்.. ஆஹா நோட் பண்ணுங்க
மதுரை: விரைவில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதவி மாற்றப்படலாம் என்றும் அண்ணாமலைக்குப் பதிலாக வேறு ஒருவர் தலைவராகப் பதவியேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனிடம் இது குறித்த கேள்விக்கு அளித்துள்ள பதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு முதல் அவர் பாஜக மாநில தலைவராக இருந்து வருகிறார். இவர் நடத்திய வேல் யாத்திரை உள்ளிட்டவற்றுக்கு மக்களிடையே நல்ல கவனம் கிடைத்தது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி வருகிறது.

பாஜக மாநில தலைவர்
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதை மனதில் வைத்து பாஜக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே மாநில தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்காக இன்னும் சில நாட்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவார் என்றும் அப்போது புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழிசை
இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், "கச்சத் தீவு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். கச்சத்தீவைக் கொடுத்தது திமுக. அதைத் தாரைவார்த்தது திமுக. தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்ப அவர்கள் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தார்கள். இது மட்டுமன்றி நீதிமன்றங்களிலும் கூட கச்சத்தீவு தமிழகத்திற்குச் சொந்தமானது இல்லை என்பதை திமுக அரசு சொல்லி இருக்கிறது. கருணாநிதிக்குத் தெரிந்தே இதெல்லாம் நடந்துள்ளது.
இப்போது தமிழ்நாடு சட்டசபையில் இவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனது சந்தேகம் ஒன்று தான். இவர்கள் பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்து இருந்தார்கள். பல மத்திய அமைச்சர்களும் இருந்தனர். அப்போது மட்டும் ஏன் உங்களுக்கு கச்சத்தீவு குறித்து நினைவு கூட வரவில்லை. கச்சத்தீவு மட்டுமில்லை நீட், இரு மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என அனைத்திலும் ஸ்டாலின் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார். இதன் மூலம் அவர்கள் மக்களின் பிரச்சினைகளைத் திசைதிருப்புகிறார்கள் என்பதை நான் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
உட்கட்சி பிரச்சினை
மேலும், பாஜக மாநில தலைவர் மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குத் தமிழிசை, "நான் தமிழக பிரச்சனையைப் பேசுவேன்... உட்கட்சி பிரச்சனை பற்றிப் பேச மாட்டேன். ஏனென்றால் எனக்கு அதில் அதிகாரம் இல்லை" என்று மட்டும் தெரிவித்தார்.
தமிழக பாஜகவில் உட்கட்சி பிரச்சினை இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் பொதுவெளியில் அதன் தலைவர்கள் அதுபோல இல்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், மாநில பாஜகவில் உள்கட்சி பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட வகையில் தமிழிசையின் இந்த கருத்து அமைந்துள்ளது.
பின்னணி என்ன!
அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைக்க பாஜக முயல்கிறது. கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் மாநில தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என அதிமுக தரப்பு சொல்வதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே தலைவர் பதவியில் மாற்றம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications