"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'
சென்னை: ''நாங்கள் (அண்ணாமலை) வந்ததால் தான் பாஜக பலமானதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் வந்ததால் பாஜக பலமாகவில்லை. அவர்கள் போனதால் இப்போது கட்சி பலவீனமாகவில்லை. கட்சி பலமாகவே இருக்கிறது. இங்கிருந்து போனவருக்கு (அண்ணாமலை) பாஜகவில் இருந்து எந்த விதத்திலும் வாழ்த்தும் கிடையாது. ஆதரவும் கிடையாது. அவர்களால் பாஜகவின் ஒரு இதழை கூட அசைக்க முடியாது'' என்று அண்ணாமலையை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி உள்ளார். புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதற்கு முன்னோட்டமாக 'We the Leader' என்ற இயக்கத்தை அண்ணாமலை தொடங்கி உள்ளார். இணையதளம் வழியாக உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

பாஜகவில் இருந்து அண்ணாமலை வெளியேறி இருப்பது பாஜகவுக்கு பின்னடைவை பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக பாஜகவில் இருந்து தற்போது வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் மதுரையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழிசை சவுந்தரராஜன், ''எங்களின் ஒரே முகம் தாமரை முகம். பாஜகவின் முகம். வேறு முகங்களை காண்பித்து பாஜகவிற்கு மாற்று சக்தி தேட வேண்டிய நிலைமை எங்களுக்கு இல்லை. இதனை மிக மிக உறுதியாக தெளிவுப்படுத்துகிறேன். இங்கிருந்து (பாஜக) போனவருக்கு (அண்ணாமலை) பாஜகவில் இருந்து எந்த விதத்திலும் வாழ்த்தும் கிடையாது. ஆதரவும் கிடையாது'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ''அண்ணாமலை பாஜகவை கைவிட்டதற்கான காரணம் என்ன?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன், ''காரணத்தை எல்லாம் அவரிடம் (அண்ணாமலை) போய் கேளுங்கள். ஆனால் பாஜகவை நேசித்த தொண்டர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். அவர் நேசித்தார். இவர் நேசித்தார் என்று நீங்கள் சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டாம். பாஜகவை நேசித்தவர்கள் எல்லோரும் இங்கே உள்ளனர். இங்கிருந்து யாரும் போகவில்லை என்று நான் சொல்லவில்லை. உண்மையாக பாஜகவை நேசிப்போர் போகமாட்டார்கள் என்று சொல்கிறேன். அவர்களால் பாஜகவின் ஒரு இதழை கூட அசைக்க முடியாது.'' என்றார்.
அதன்பிறகு, ''அண்ணாமலை போன பிறகு கட்சி பலமாக இருக்கிறதா?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழிசை சவுந்தரராஜன், ''கட்சி பலமாக தான் இருக்கிறது. நாங்கள் (அண்ணாமலை) வந்ததால் தான் கட்சி பலமானதாக சில பேர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் (அண்ணாமலை) வந்ததால் கட்சி பலமாகவில்லை. இப்போது போனதால் கட்சி பலவீனம் ஆகவில்லை. எப்போதுமே இந்த கட்சி பலமான கட்சியாக தான் உள்ளது'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications