‘என்கிட்ட இதெல்லாம் கேட்க கூடாது..’ - தவெக விஜய் குறித்த கேள்வியால் கடுப்பான சீமான்
மதுரை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. இந்தமுறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் விஜய் களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்பேன் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக சீமானிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர் கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம், ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைக்காக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலர் தேர்வு எழுதி வெற்றி பெற்று பணி நியமனத்திற்கு காத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியின் போது ஸ்டாலின் நாங்கள் வந்து இதை நிறைவேற்றுவோம் என கூறினார்.

இதுதான் நல்லாட்சியா
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி, தற்போது அவர்கள் ஆட்சி நிறைவடைய போகிறது. இன்னும் நிறைவேற்றாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். வெள்ளைக்காரன் போராட அனுமதிக்கின்ற ஜனநாயகத்தையாவது வைத்திருந்தான். விடுதலை வெற்ற நாட்டில் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு கூட அனுமதி கொடுக்கவில்லை.
அவர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலிக்காமல் அடித்து துன்புறுத்துகிறார்கள். செவிலியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களை தெருவில் உட்கார வைத்து கொண்டு, நல்லாட்சி என்றால் எப்படி. ஆசிரியர்கள் தேர்வில் திமுக ஆட்சியை பற்றி புகழ்ந்து எழுத சொல்கிறார்கள்.
எங்கும் நடைபெறாத கொடுமை
இது என்ன மாதிரியான ஆட்சி. எந்த அரசாங்கமாவது இப்படி தேர்வு நடத்துமா. அவர்களின் திட்டங்களை பாராட்டினால் தேர்ச்சி பெற வைப்பார்கள். இல்லையென்றால் தோல்வியடைய செய்வார்கள். யார் அவர்கள் கட்சிக்காரர்கள், எத்தனை பேர் ஆதரக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இப்படி செய்கிறார்கள்.
போராடும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், கேட்காத மக்களுக்கு திட்டங்கள் என்கிற பெயரில் ரூ.12,000 கோடி கொட்டியுள்ளனர். இந்த கொடுமை எங்கும் நடைபெறாது. இந்தியம், திராவிடம் எங்களின் கோட்பாட்டு எதிரி. அதைத் தாங்கி நிற்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிர்க்கத்தான் செய்வோம்.
என்கிட்ட கேட்க கூடாது
வரவர், போறவரை எல்லாம் எதிர்க்க முடியாது என்று விஜய் கூறினால் வலிமையானவர் யார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். என்னிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைத்தான் கேட்க வேண்டும். அவரிடம் கேட்க வேண்டியதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications