கொரோனா நிவாரணம்... ரூ. 90,000 நன்கொடை... யாசகர் மதுரை பூல்பாண்டியனுக்கு விருது!!
மதுரை: கொரோனா நிவாரண நிதியாக இதுவரை யாசகம் எடுத்த பணத்தில் இருந்து ரூ. 90,000 நன்கொடை வழங்கி இருக்கும் யாசகர் பூல்பாண்டியனுக்கு மதுரை கலெக்டர் டிஜி வினய் விருது வழங்கி கவுரவித்தார். மாவட்டக் கலெக்டர் வாயிலாக முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த நன்கொடையை பூல்பாண்டியன் கொடுத்து இருந்தார்.
கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வர் நிவாரண நிதி தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. தொழில் அதிபர்கள் முதல் அனைவரும் தங்களால் முடிந்த நிதியை கொடுத்தனர். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் முதல் நிவாரண நிதியாக யாசகம் எடுத்த பணத்தில் இருந்து ரூ. 10000த்தை மே 18ஆம் தேதி மதுரை கலெக்டரிம் வழங்கினார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு முறையும் ரூ. 10000 என்று எட்டு முறை வழங்கி இருந்தார்.

இதையடுத்து சுதந்திர தினத்தன்று பூல்பாண்டியனுக்கு விருது கொடுத்து கவுரவிக்க அவரது பெயரையும் சுதந்திர தின விருது பட்டியலில் கலெக்டர் வினய் சேர்த்து இருந்தார். ஆனால், பூல்பாண்டியன் யாசகம் எடுப்பவர் என்பதால், அவரை ஒரு இடத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு அந்த நாளில் விருதும் கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஒன்பதாவது முறையும் கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண நிதி கொடுப்பதற்காக பூல்பாண்டியன் வந்து இருந்தார். அப்போது அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு கலெக்டர் வினய் விருது வழங்கி கவுரவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவரது இரண்டு மகன்கள் இவரை கண்டுகொள்ளாத காரணத்தினால் யாசகம் எடுத்து வருகிறார். இதற்கு முன்னதாக பள்ளிகளில் டேபிள், இருக்கை மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள நன்கொடை கொடுத்துள்ளார்.
கொரோனா காலத்தில் பலரும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டபோது, இவரும் அரசு அமைத்து இருந்த முகாமில் தங்கி இருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி யாசகம் பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications