திருப்பதி லட்டு! ஒரு இனிப்பில் மாட்டு கொழுப்பு கலந்ததை ஏன் அரசியலாக்குகிறீர்கள்? திருமாவளவன் கேள்வி
மதுரை: பெரும்பாலான இனிப்புகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்படுகிறது. அப்படியிருக்கையில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு சேர்த்ததை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட போது மதுரை கே.புதூரில் முதல்முறையாக திருமாவளவனால் கொடி ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் 20 அடியாக இருந்த கொடி கம்பம் திடீரென 62 அடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு விசிகவினர் எந்த அனுமதியையும் பெறவில்லை என தெரிகிறது.

இதனால் வருவாய்த் துறையினர் அண்மையில் அந்த கொடிக் கம்பத்தை அகற்றியது பெரும் சர்ச்சையானது. ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து கொடி கம்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய கம்பத்தில் திருமாவளவன் கொடியை நேற்று ஏற்றி வைத்தார்.
கிரேன் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சத மாலையை திருமாவளவனுக்கு தொண்டர்கள் அணிவித்தனர். இதையடுத்து திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் மாநில கட்சியாக மாறிய போதும் கொடியேற்றம் உள்ளிட்ட சவால்களை நம் கட்சி சந்தித்து வருகிறது. கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம் என வெள்ளி விழா மாநாட்டில் நான் பேசியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பெரும்பாலான இனிப்பு பொருட்களில் விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கம்தான். இதில் திருப்பதி லட்டு விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டது சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானமும் மாடு, பன்றிகளின் கொழுப்புகள் அதில் சேர்க்கப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டனர்.
மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பால் நிறுவனத்தை நெய் சப்ளை செய்வதிலிருந்து தடை செய்துள்ளதாகவும் தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் தெரிவித்திருந்தார். அண்மைக்காலமாக லட்டின் தரம் சரியாக இல்லை என முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு தெரிவித்திருந்தார்.
அவர் கூறுகையில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகாபாவம் செய்துவிட்டார்கள். பிரசாதத்தின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என பல முறை தேவஸ்தான நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது என்ற குற்றச்சாட்டு குறித்து ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில் கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள். மாநிலத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களைச் திசைத் திருப்பவே இதைச் செய்கிறது.
இந்த பிரச்சினை ஜூலை மாதம் ரிப்போர்ட் செய்யப்பட்டது. அப்போது சந்திரபாபு நாயுடு ஆட்சியே இருந்தது. நெய் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்து அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால் சோதனையை தாண்டும் நெய் மட்டுமே லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும். எங்கள் ஆட்சி காலத்தில் மட்டும் 18 முறை தரமில்லை என சொல்லி பொருட்களை நிராகரித்துள்ளோம்.
எனவே இந்த லட்டில் விலங்கு கொழுப்பு இருப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. எனக்கும் எனது அரசுக்கும் எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள். இது குறித்து பிரதமருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதுவேன். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications