திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. இந்து முன்னணியை சேர்ந்த 13 பேர் கைது.. 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து முன்னணியைச் சேர்ந்த 15 நிர்வாகிகள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனிடையே கோயில் நிர்வாகம் தரப்பில் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனிடம் முறையிட்டார். இதன்பின், சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். பின்னர் ராம ரவிக்குமார் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் மலையில் ஏற முயற்சித்தனர்.
அதற்குள் மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தினார். இதனால் மலையேறும் வாயிலில் அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் மலையேற முயன்ற இந்து முன்னணியினரையும் காவல்துறை தடுத்தது. சிலர் பாதுகாப்பு அரண்களை தள்ளிவிட்டு மலையேற முயற்சித்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரு போலீசார் காயம் அடைந்தனர்.
ஒரு கட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் கலவர சூழல் ஏற்பட்டது. ஆனால் போலீசார் எந்தவித தடியடியும் நடத்தாமல் இந்து முன்னணி நிர்வாகிகளை தடுத்து மட்டுமே நிறுத்தினர். சிஐஎஸ்எஃப் வீரர்கள் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், தமிழக காவல்துறை தரப்பில், எங்களால் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.. இதனால் ஏற்படும் விளைவுகளை நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக இந்து முன்னணியைச் சேர்ந்த 13 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது. அதேபோல் இந்து முன்னணியைச் சேர்ந்த 15 நிர்வாகிகள் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications