திருப்பரங்குன்றம்: நாங்க பயந்த மாதிரியே நடந்து போச்சு.. தமிழக அரசு காரசார வாதம்!
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது தமிழக அரசு தரப்பில், தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. மனுதாரர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார் என்றும், தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார்.

இதனிடையே திருப்பரங்குன்றத்தில் 144 தடை அமல்படுத்தப்பட்டு, மலை மீது யாரும் ஏறாதவாறு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக போலீசார் - இந்து முன்னணி இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவலர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இறுதியாக இந்து முன்னணி நிர்வாகிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து நேற்றிரவே தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவசர வழக்காக இந்த விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணை தொடங்கியது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரன் வாதிட்டார்.
அதில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பேரி கார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன.. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.. திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.
ஆனால் மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. மனுதாரர் அதிக நபர்களோடு சென்று பிரச்சனை ஏற்படுத்தியதால், அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில், விளக்கம் அளிக்கவே வாய்ப்பு தரப்படவில்லை என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications