தவெக மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்களுக்கு வழிநெடுக உணவு.. நிர்வாகிகள் ஏற்பாடு!
மதுரை: மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்களுக்கு தவெக நிர்வாகிகள் சார்பாக வழி நெடுக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெறுகிறது. சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், ஒன்றரை லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் என ஏராளமான வசதிகளை அக்கட்சி மேலாண்மை குழு ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டமாக தயாராகும் இந்த மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பங்கேற்பதற்காக தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றே ஏராளமானோர் மாநாடு நடைபெறும் திடலில் திரண்டுள்ளனர்.
கடந்த முறை நடந்த மாநாட்டில் அக்கட்சியின் தொண்டர்கள் குடிநீருக்கு மிகவும் அவதிப்பட்டனர். இந்த முறை அப்படி நடந்துவிடக்கூடாது என பல இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டில் பங்கேற்கும் மக்களுக்கு அவசரத் தேவைக்கான மருந்துப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலம் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் திடலில் மொத்தம் 40 அவசர ஊர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்களுக்கு, தவெக நிர்வாகிகள் சார்பாக வழி நெடுக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வழி நெடுக, தவெக பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில், தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தவெக மாநாட்டு திடலிலேயே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு திடலை சுற்றி ஸ்நாக்ஸ், நொறுக்குத் தீனிகள், கூல் டிரிங்ஸ், ஜிகர்தண்டா, கரும்பு ஜூஸ் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 10க்கும் மேற்பட்ட ஹோட்டல்களும் அமைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
