விஜய் சொல்லியும் கேட்காத தவெக தொண்டர்கள்.. மாநாட்டு திடலில் அழுகை சத்தம்.. காலை முதலே குழப்பம்
மதுரை: தவெகவின் 2வது மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்பு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். ஆனால், இன்று விஜய் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் பலரும் அதைப் பின்பற்றவில்லை. இதனால் அங்குக் காலை முதலே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. கடந்தாண்டு முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இன்று 2வது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டைப் பிரச்சனை இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடிக்க தவெக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்குத் தண்ணீர் வசதி, ஸ்நாக்ஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

விஜய் சொல்லியும் கேட்கல
முன்னதாக இந்த மாநாடு தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் கர்ப்பிணிப் பெண்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்க்குமாறு விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
பெரும் அவதி
இருப்பினும், இன்றைய தினம் மாநாட்டில் பலர் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். மாலை தான் மாநாடு என்ற போதிலும் பலரும் குழந்தைகளுடன் காலையே வந்துவிட்டனர். 10- 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், குழந்தைகள் அழ ஆரம்பித்தனர். எவ்வளவு சமாதானப்படுத்தியும் பல குழந்தைகள் அழுகையை நிறுத்தவில்லை. இதனால் வெளியே நிழலான பகுதிக்கு வரப் பெற்றோர் முயன்றனர். ஆனால், அதற்குள் கூட்டம் அதிகரித்துவிட்டது. இதனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.
சிலர் குழந்தைகளுடன் தடுப்புகளைத் தாண்டிக் குதித்து வெளியே சென்றனர். இன்னும் சிலர் முதலில் தன்னார்வலர்களிடம் கொடுத்துவிட்டு, சுற்றிச் சென்று வாங்கிக் கொண்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள் கதறி அழுத பல காட்சிகள் நேரலை காட்சிகளிலும் பார்க்க முடிந்தது. விஜய் சொன்னது போலவே குழந்தைகளுடன் மாநாட்டிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தச் சிரமத்தைத் தடுத்திருக்கலாம்.
சாலையிலேயே நிற்கும் வாகனங்கள்
அதேபோல மாநாட்டுக்காகப் போடப்பட்டிருந்த பார்கிங் காலையே நிரம்பிவிட்டது. இதனால் அதன் பிறகு வந்த வாகனங்கள் அப்படியே சாலை ஓரம் நிறுத்தப்பட்டன. இதுபோல சாலையில் சில கிமீ தூரத்திற்கு இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அங்கு டிராபிக் நெரிசலும் அதிகரித்து வருகிறது. மாலை மேலும் டிராபிக் அதிகரிக்கலாம் என்பதாலேயே விஜய் மாநாட்டைச் சீக்கிரம் முடிக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
விஜய் தனது கடிதத்தில் மாநாட்டுக்கு வரும்போதும் சரி, மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால், அதையும் தொண்டர்கள் கேட்காமல் சாலையோரமே வாகனத்தை நிறுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
வெயில் உக்கிரம்
இன்று மதுரையில் வெயில் உக்கிரமாக இருக்கும் சூழலில் அதுவே பிரதான சிக்கலாக மாறியிருக்கிறது. வெயிலைத் தாங்க முடியாமல் சில தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியே சுமார் 20 பேருக்கு மேல் மயக்கம் ஏற்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் பலரும் கீழே போடப்பட்டிருந்த பச்சை நிற மேட்டை எடுத்து தற்காலிகக் கூரை போலவும் அமைத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications