மதுரை தவெக மாநாடு.. திமுக, அதிமுகவை பின்பற்றி.. விஜய் செய்யப்போகும் சம்பவம்.. சிக்கலுக்கு முடிவு!
மதுரை: இன்னும் 2 நாட்களில் தவெக மாநில மாநாடு நடக்கவுள்ள நிலையில், மாநாட்டின் மேடையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து மேடையேற்ற உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. முதலில் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நாளை மறுநாள் மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் நடக்கவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதிகள் மட்டும் 6 இடங்களில் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் திடல் மட்டும் சுமார் 250 ஏக்கர் அளவிற்கு அமைந்துள்ளது. அதில் தவெக தலைவர் விஜய் ரேம்ப் வாக் செய்வதற்காக சுமார் 1 கிமீ தூரத்திற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநாட்டின் ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னின்று நடத்தி வருகிறார். இவருக்கு ஆதரவாக மதுரை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கல்லணை மற்றும் தங்கப்பாண்டி இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் விஜய் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. தற்போதே வேட்பாளர்களை அறிவித்தால், அவர்கள் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள சரியாக இருக்கும் என்று தவெக தலைமை கணக்கிட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விஜய் திட்டத்தை மாற்றி இருக்கிறார்.
அதாவது விஜய் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த சுற்றுப்பயணத்திற்கு பின் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதே சரியாக இருக்கும் என்று விஜய் கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல் சுற்றுப்பயணத்தின் போது மாவட்ட நிர்வாகிகளை தன்னுடன் நிற்க வைக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார்.
ஆனாலும் மாநாட்டின் மேடையில் மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விஜய் முடிவு எடுத்திருக்கிறார். விக்கிரவாண்டி மாநாட்டில் தவெக தலைமை நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரும் மேடையில் அமர வைக்கப்படவில்லை. விக்கிரவாண்டி பகுதியில் மாவட்டச் செயலாளர் அல்லது பொறுப்பாளரைக் கூட விஜய் அறிமுகம் செய்யவில்லை.
இது அப்போதே விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாநாட்டில் மதுரை மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க விஜய் முடிவு எடுத்துள்ளார். அவர்களுக்கு மாநாட்டில் மேடையில் அமர வைக்க உள்ளதோடு, அவர்களைத் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலமாக 2ஆம் கட்ட தலைவர்களை உருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
விஜயின் இந்த திட்டம் கிட்டத்தட்ட திமுக மற்றும் அதிமுகவை பின்பற்றி அமைந்திருக்கிறது. எந்த மாவட்டத்தில் மாநாடு அல்லது பொதுக்கூட்டம் போட்டாலும் முதலில் அவர்களுக்கு முக ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாராட்டியே பேச்சைத் தொடங்குவார்கள். இதன் மூலமாக மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் தலைமை மீதும் கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.
இதனைக் கணித்தே விஜய் இப்படியான ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும் தவெக தொடங்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட சூழலில், இதுவரை 2ஆம் கட்ட தலைவர்கள் யாரும் தொலைக்காட்சியில் கூட பேசத் தொடங்கவில்லை. இதனால் மதுரை மாநாடு மூலமாக இந்த சிக்கலை சரி செய்ய விஜய் முடிவு எடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications