அப்பா ரத்தம் வருதுப்பா.. உடல் எடை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட மதுரை பெண்! அந்த மருந்து இதுதான்
மதுரை: உடல் எடை குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் இளம் பெண்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யூடியூப், சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத குறிப்புகளை நம்பி மருந்துகள், டயட் முறைகளை பின்பற்றுவது உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடைக் குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பலமுறை அறிவுறுத்தியும் கூட சில விபரீதங்கள் நடந்துவிடுகின்றன.. இதோ இப்போது மதுரையில் நடந்ததை பாருங்கள்.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் கலையரசி... 19 வயதாகிறது.. இவர் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்..

உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆர்வம் காரணமாக கலையரசி கடந்த சில நாட்களாக யூடியூப்பில் வெளியாகும் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.
யூடியூப்பில் கூறப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில், கடந்த 17-ம் தேதி மதுரை கீழமாசி வீதியில் செயல்பட்டு வரும் நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றிற்கு கலையரசி நேரில் சென்று, அங்கு சில நாட்டு மருந்து பொருட்களை வாங்கியுள்ளார்
நாட்டு மருந்துக்கடை - டாக்டர்கள் பரிந்துரை இல்லை
டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல், யூடியூப்பில் பார்த்த தகவல்களை மட்டும் நம்பி அவர் அந்த மருந்துகளை வீட்டுக்கு சென்று சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த மருந்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கலையரசிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிய பெற்றோர் உடனடியாக அவரை மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.. பிறகு உடல்நலம் சீராகிவிட்டதாக கூறி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்..
போகும் வழியிலேயே போன உயிர்
ஆனால், மறுநளே அதாவது ஜனவரி 18-ம் தேதி இரவு மீண்டும் கலையரசிக்கு கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நிலை மோசமானதை தொடர்ந்து, பெற்றோர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். ஆனாலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கலையரசி உயிரிழந்துவிட்டார்.. அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்களும் உறுதி செய்தனர்..
இந்த சம்பவம் குறித்து கலையரசியின் தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், செல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலையரசி எந்த வகையான நாட்டு மருந்துகளை உட்கொண்டார், அவை உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததா என்பதைக் கண்டறிய போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட நாட்டு மருந்து கடையிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போலீஸ் அட்வைஸ்
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "யூடியூப் வீடியோக்களை பார்த்து மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எந்த மருந்தாக இருந்தாலும், முறையான மருத்துவ ஆலோசனை இன்றி உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாட்டு மருந்து கடைகளில் கூட முறையான விசாரணையின்றி மருந்து பொருட்களை வழங்கக் கூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
என்ன நாட்டு மருந்து
மாணவி சற்று உடல் எடையுடன் இருந்தால், எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.. உடல் எடையை குறைக்கும் வெங்காரம் என்ற பெயரில் கூகுளில் தேடி உள்ளார்.. அதற்கு பிறகே நாட்டு மருந்து கடைக்கு சென்று வெங்காரம் என்ற நாட்டு மருந்தை சாப்பிட்டுள்ளார்.. சாப்பிட்டதுமே வயிறு வலி வாந்தி வந்துள்ளது.. முதலுதவி சிகிச்சை பிறகு வீடு திரும்பியும்கூட உடல் நலம் பாதிப்பு குறையவில்லையாம்.. வயிறு வலி என்று அழுதுகொண்டே இருந்தள்ளார்..
இரவு நேரத்தில் கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப்பதாகவும் வயிற்றுப் போக்கில் ரத்தம் வெளியேறி வருவதாகவும் சொல்லி தன்னுடைய அப்பாவை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். அதற்கு பிறகுதான் ராஜாஜி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.. ஆனால் வழியிலேயே மகளின் உயிர் பறிபோய்விட்டது..












Click it and Unblock the Notifications