82 வயதிலும் தளராத நடை.. 11 நாட்கள் 150 கி.மீ.க்கு மேல் நடந்த வைகோ! மதுரையில் நிறைவடைந்த நடைபயணம்!
மதுரை: திருச்சியில் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் இன்று மதுரையில் நிறைவடைந்தது. நடைபயண நிறைவு பொதுக் கூட்டத்தில் நிறைவு நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு, சமூக ஒற்றுமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ம்திமுக பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார். திருச்சியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் இருந்து புறப்பட்ட வைகோ, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் 500க்கும் மேற்பட்டோர் இணைந்து நடந்தனர்.

கடந்த 11 நாட்களில் வைகோ தினமும் சுமார் 15 முதல் 17 கிலோ மீட்டர் வரை நடைபயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து பேசினார். நடைபயணத்தின் போது சமூக சமத்துவம், மத நல்லிணக்கம், போதைப்பொருள் இல்லாத தமிழகம் போன்ற கருத்துகளை வலியுறுத்தி அவர் பேசினார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வந்த வைகோவுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நடைபயணத்தின் 10வது நாளில், நேற்று இரவு மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு அவர் வந்தடைந்தார். அங்கு புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, உத்தங்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர் அந்த நாளின் நடைபயணத்தை முடித்துக்கொண்டார்.
இன்று 11வது நாளான இறுதி நாளில், காலை ஒத்தக்கடையிலிருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார். வழியெங்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாட்டுத் தாவணி பகுதியில் திரண்டு வந்த தொண்டர்கள் வைகோவின் நடைபயணத்தை உற்சாகமாக வரவேற்றனர். கடந்த 11 நாட்களில் மொத்தமாக 150 கிலோ மீட்டருக்கு மேல் வைகோ தனது தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது சமத்துவ நடைபயணத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு சமத்துவம், சமூக நீதி மற்றும் அரசியல் நிலைமை குறித்து விரிவாக உரையாற்றினார். திருச்சியில் தொடங்கிய இந்த நடைபயணம் மதுரையில் சமத்துவ மாநாட்டுடன் நிறைவடைந்தது. இந்த நிறைவு நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.












Click it and Unblock the Notifications