வாரிசு? or துணிவு? போட்டி போடும் விஜய் அஜித் ரசிகர்கள்.. மதுரையில் தொடங்கியது போஸ்டர் யுத்தம்!
மதுரை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு படமும் திரைக்கு வர உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒருபக்கம் பெரும் எதிபார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் போஸ்டர்களில் வார்த்தை போரில் இரு நடிகர்களின் ரசிகர்களும் குதித்துள்ளனர். குறிப்பாக மதுரையில் விஜய், அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அதேபோல், நடிகர் அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வர உள்ளது.
இரு படங்களும் பொங்கலுக்கு மோத உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டு வாரிசு, துணிவு படத்துக்கான போஸ்டரை ஒட்டி அசத்தி வருகின்றனர்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு
கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளி வந்த ஜில்லா திரைப்படமும் அஜித் நடித்த வீரம் படமும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்றாக வெளிவந்தன. இதன்பிறகு 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இரு உச்ச நட்சத்திரங்களின் படமும் ஒன்றாக மோத உள்ளன. இதனால் இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து யுத்தத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். அதுவும் இன்று வாரிசு படத்தின் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

கவனத்தை பெற்ற போஸ்டர்
இதனால், இன்று காலையில் இருந்தே ட்விட்டரில் இந்த படங்கள் தொடர்பான பதிவுகள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. எப்போதும் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டுவதில் மதுரைக்கு ஒரு தனி இடம் உண்டு என்றே சொல்லலாம். அரசியல் முதல் சினிமா வரை என அனைத்திலும் மதுரை பகுதிகளில் ஒட்டப்படும் போஸ்டர்கள் தனிக்கவனம் பெறும் வகையில் இருக்கும். அந்த வகையில், மதுரையில் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை பெற்றுள்ளது.

விஜய் அஜித் ரசிகர்கள் மோதல்
அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மாறி மாறி போஸ்டர்களில் தங்கள் யுத்தத்தை தொடங்கியிருக்கின்றனர். 'ஒருவனுக்கு பின்னால் நிற்பவன் அல்ல நீ.. துணிவுடன் முன்னால் நிற்பவன்..." தம்பிகளா உங்கள் அண்ணன் படம் ஓட அவர் உங்கள சந்திக்கணும்! எங்க அண்ணன் 'துணிவு' கூட மோதனுமா என நீங்க கொஞ்சம் சிந்திக்கணும்!" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அஜித் ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.

விஜய் ரசிகர்கள் பதிலடி
இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் மதுரை கோரிப்பாளையம் பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், 'உங்களுக்கு துணிவு படம் வந்தா தான் மாஸ். ஏகே- வுக்கே குட்டி கதை சொல்லித் தருவார் எங்கள் வாரிசு பாஸ்..!, 'தம்பிகளா உங்கள் அண்ணணுக்கு துணிவு இருந்தால் உங்களை சந்திக்க சொல்லுங்க... அப்படி உங்க அண்ணனுக்கு துணிவு இல்லைன்னா எங்க அண்ணன பார்த்து சிந்திக்க சொல்லு..! என்று போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications