பாக்கியராஜ், டி.ஆருக்கு கூட தான் கூட்டம் சேர்ந்துச்சு! விஜய் பற்றி கேட்டதும்.. செல்லூர் ராஜூ டென்ஷன்
மதுரை: விஜய்க்கு கூடும் கூட்டத்தை எல்லாம் வைத்து அவரை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது என அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு சாடியுள்ளார். சிரஞ்சீவி, சிவாஜிக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது எனக் கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, கூட்டத்தை வைத்தெல்லாம் நடிகர்களின் அரசியல் செல்வாக்கை மதிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே அரசியல் களம் சூடாகிவிட்டது. கூட்டணியை எல்லாம் தாண்டி இப்போது பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. அப்படித் தான் நடிகரும் தவெக தலைவருமான விஜய் மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பிரச்சாரத்திற்கு வரும் விஜய், மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

விஜய் பிரச்சாரம்
விஜய்யை பார்க்க நல்ல கூட்டம் கூடுகிறது. விஜய் செல்லும் இடத்திற்கு அருகே இருக்கும் ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருகிறார்கள். இதனால் விஜய் பிரச்சாரத்தில் அதிகக் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. இதற்கிடையே சிரஞ்சீவி, சிவாஜிக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது என கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, கூட்டத்தை வைத்தெல்லாம் நடிகர்களின் அரசியல் செல்வாக்கை மதிப்பிட முடியாது என சாடியுள்ளார்.
செல்லூர் ராஜு தாக்கு
இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜு, "இந்த ரசிகர் கூட்டத்தை எல்லாம் பார்த்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிரஞ்சீவிக்குக் கூடாத கூட்டமா? சிவாஜிக்கு கூடாத கூட்டமா? பாக்கியராஜ், டி.ராஜேந்தருக்கு கூடாத கூட்டமா? அடுக்கு மொழியில் பேசக்கூடிய எத்தனை பேரைப் பார்த்திருப்பார்கள் மக்கள்!
எனவே, கூட்டத்தை வைத்தெல்லாம் மதிப்பிடக்கூடாது. யாருக்குக் கூடும் கூட்டத்தையும் வைத்து மதிப்பிட முடியாது. நடிகர் என்றாலே கூட்டம் கூட தான் செய்யும். விஜய் ஒரு முன்னணி நடிகர். கதாநாயகனாக நடித்தவர். அவருக்கு என ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதை எல்லாம் நான் குறை சொல்லவில்லை. அந்த ரசிகர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.
கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியாது
சிவாஜி கணேசனை நம்பி வந்தவர்கள் எல்லாம் எங்குப் போனார்கள்.. அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்கள். காங்கிரஸில் இருந்து பல கட்சிகள் மாறி. ஒவ்வொரு கட்சிகளிலும் முக்கியத்துவம் இல்லாமல் போனார்கள். பாக்கியராஜ் தொடங்கி பலருக்கும் இதைக் கதை தான். நான் குறை சொல்ல வேண்டும் எனச் சொல்லவில்லை. கூட்டத்தை வைத்து முடிவு செய்யக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்" என்றார்.
பலரும் விமர்சனம்
செல்லூர் ராஜு மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் கூட விஜய் பற்றிப் பேசும்போது இதே கருத்துகளைக் கூறுகிறார்கள். விஜய் நடிகர் என்பதால் அவரை பார்க்க அதிகளவில் மக்கள் வருவதாகவும் ஆனால் அவை எல்லாம் நிச்சயம் வாக்குகளாக மாறாது என்பதும் அவரது கருத்து. நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் ஹாசனும் கூட நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இதே கருத்துகளைத் தான் கூறியிருந்தார்.
தமிழகத்தில் தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது திமுக, அதிமுக கூட்டணியைத் தவிர விஜய் தலைமையிலும் ஒரு கூட்டணி அமையும் என்றே தெரிகிறது. இது தவிரச் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிட இருக்கிறது. இதன் மூலம் அடுத்தாண்டு தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்படும்.












Click it and Unblock the Notifications