மதுரை அருகே 7 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விஜயகாந்த்! அரசியலுக்கு வரும் முன்பு 1993ல் நடந்த கதை!
மதுரை: மறைந்தும் மக்கள் மனங்களில் வாழும் விஜயகாந்த் கடந்த 1993ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே 7 ஏக்கர் நிலத்தை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக தானமாக வழங்கி நெகிழ வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் மறைந்த பிறகு ஒவ்வொரு நாளும் அவர் குறித்த ஒவ்வொரு புது தகவல்களை அவரை நன்கறிந்த நபர்கள் வெளியிட்டு வருகிறார்கள். விஜயகாந்த் உயிரோட இருந்தவரை கூட அவரை பற்றி இப்படியொரு தகவல்கள் வெளிவந்ததில்லை. இதனிடையே விஜயகாந்துக்கு அவரது தந்தை அழகர்சாமி வழங்கிய 7 ஏக்கர் நிலத்தை கடந்த 1993ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக அவர் வழங்கிய நிலையில் அதில் பல நூறு குடும்பங்கள் இன்று வசித்து வருகின்றன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரிடமிருந்து 7 ஏக்கர் நிலத்தை வாங்கிய விஜயகாந்தின் தந்தை அழகர்சாமி அதனை தனது மகன் எதிர்காலத்துக்காக வாங்கி வைத்திருந்திருக்கிறார். சினிமாவை நம்பி சென்னை சென்ற விஜயகாந்தின் நலன் கருதி அவரது தந்தை இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார். இதனிடையே சினிமாவில் ஹீரோவாக நடித்து பணம், பெயர், புகழுக்கு குறைவில்லாத நிலை வந்தவுடன் கடந்த 1993ஆம் ஆண்டு தனக்கு தனது தந்தை கொடுத்த நிலத்தை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக தானமாக வழங்கினார் விஜயகாந்த்.
ஏறத்தாழ அரசியல் கட்சி தொடங்குவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை தானமாக வழங்கி வியக்க வைத்தவர் விஜயகாந்த். அவர் வழங்கிய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் இது குறித்து மாலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியின் போது, அதற்கான பட்டாவை காட்டி, விஜயகாந்தின் கொடையுள்ளத்தை பற்றி சிலாகித்துள்ளனர். இதனிடையே 1993ஆம் ஆண்டு விஜயகாந்த் தானமாக வழங்கிய 7 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ.21 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications