“முருக பக்தர்கள் ஒருங்கிணைவது.. திருமாவளவனுக்கு ஏன் பிடிக்கவில்லை?” - எல்.முருகன்
மதுரை: இந்து முன்னணி மற்றும், சங் பரிவார் அமைப்புகள் சார்பில் மதுரையில் இன்று 'முருக பக்தர்கள் மாநாடு' என்கிற பெயரில் மாநாடு நடக்கிறது. இதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், "முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவனுக்கு ஏன் பிடிக்கவில்லை?" என மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை, கலைஞர் திடலில் நடக்கிறது. அந்த வகையில் இந்த நாள் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக மாறியிருக்கிறது.

பல லட்சம் பக்தர்கள் இன்று கந்த சஷ்டியை ஒரே நேரத்தில் பாடுகிறார்கள். இந்த புனிதமான நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி, துர்கா ஸ்டாலினும் தனது வீட்டில் கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டுகிறேன். இது கட்சி சார்ந்த மாநாடு கிடையாது. கட்சி சார்பற்று அனைவரும் பங்கேற்கும் ஆன்மீக மாநாடு.
இம்மாநாட்டின் மூலம், தமிழகம் ஆன்மீக மண் என்பதை உலகம் அறியும். முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றோருக்கு ஏன் பிடிக்கவில்லை? வேறு மதங்கள் இப்படி ஒன்று சேர்ந்தால் எதிர்க்க துணிவார்களா?
மறுபுறம் மாநாட்டிற்கு காவல்துறை போதிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் கூட, தேவையான ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை" என்று விமர்சித்திருந்தார்.
முன்னதாக இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்க கூடாது, எனவும் ஆன்மீகத்தை தனது அரசியல் நோக்கத்திற்காக பாஜக பயன்படுத்தவே, இப்படியான மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டி திருமாவளவன் உள்ளிட்டோர் மதுரையில் மனித சங்கிலி பேரணியை நடத்தியிருந்தனர். அதில் பேசிய திருமாவளவன்,
"இந்த மனித சங்கிலி போராட்டம், முருக பக்தர்களுக்கு எதிரானது அல்ல. முருக பக்தர்கள் சனாதனுக்கும், சதி அரசியலுக்கும் இறையாகிவிட வேண்டாம், பலியாகி விட வேண்டாம் என்று சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் இங்கே குவிந்திருக்கிறோம், கூடியிருக்கிறோம், கைகோர்த்து நிற்கிறோம்.
மதுரை மண் மத நல்லிணக்கத்திற்கு பேர் போன மண். குறிப்பாக திருப்பரங்குன்றத்தில், இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் இஸ்லாமியர்களை பகைத்துக் கொள்ளவில்லை. அதை போல் இஸ்லாமியர்கள் இந்துக்களை பகையாக கருதவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் திருப்பரங்குன்றத்திலே ஏதோ பகைமை இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்.
முருக பக்தர்களுக்கு இவர்கள் ஏதோ பாதுகாவலர்கள் என்பதைப் போல காட்டிக் கொண்ட முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் முருக பக்தர்கள்தான். முருகனை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. முருகனை வழிபடாதவர்கள் யாரும் இல்லை. எல்லா கட்சிகளிலும் முருக பக்தர்கள் உண்டு. அனைத்து கட்சி தோழர்களும் முருகபக்தர்களாக இருக்கிறார்கள்.
நாங்கள் யாரும் இந்த கோரிக்கையை வைக்கவில்லை. எங்களுக்காக மாநாடு நடத்துங்கள் என்று எந்த கட்சியைச் சார்ந்த முருக பக்தர்களும் கோரிக்கை வைக்கவில்லை. பாஜகவினர் அவர்களின் அஜந்தாவை, செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, பாஜகவை இங்கு வளர்ப்பதற்காக மதத்தின் அடிப்படையிலே அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்த உத்தியை கையாளுகிறார்கள். இதற்கு முருக பக்தர்கள் ஏமாந்து விட வேண்டாம் என்று இந்த மனித சங்கிலி போராட்டத்தின் ஊடாக வேண்டிக்கொள்கிறோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications