தமிழக அரசு பற்றி சர்ச்சைக்குரிய ட்வீட்.. பிரபல யூடியூபர் மாரிதாஸ் அதிரடி கைது!
சமூக வலைதளங்களில் பிரபலமான பிரபல யூடியூபர் மாரிதாஸை மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யக்கூடாது என பாஜக பிரமுகர் சரவணன் உள்ளிட்டோர் போலீஸிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

மாரிதாஸ் கைது
பிரபல யூடியூபர் மாரிதாஸ். பேராசிரியராக மதுரையின் பிரபல கல்லூரிகளில் பணியாற்றிய அவர் ஆரம்பத்தில் இடதுசாரி கருத்துகளை கொண்டிருந்தார், பின்னர் அன்னாஹசாரே இயக்கத்தில் இணைந்து மதுரையில் போராட்டம் நடத்தினார்.

யுடீயூபர் மாரிதாஸ்
முதலில் முகநூல் பக்கம் வந்த மாரிதாஸ் பின்னர் வெள்ளைபோர்டு வைத்துக்கொண்டு யூடியூப் பக்கம் வந்து பேச ஆரம்பித்தார். அரசியல் நிகழ்வுகளை வைத்து பேச ஆரம்பித்தார். இடதுசாரியாக ஆரம்பித்து பின்னர் வலதுசாரியாக மாறி பேச ஆரம்பித்தார். தொடர்ந்து திமுகவை அதன் தலைவர்கள், தோழமைக்கட்சிகளை விமர்சிக்க ஆரம்பித்தார். இதனால் இவரது யூடியூப் பக்கம் ஆதரவு கூடியது.

ட்ரால் செய்த நெட்டிசன்கள்
அதே நேரம் மறுபுறம் மாரிதாஸின் பேச்சு செயல்கள் ட்ரால் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் வரிந்துக்கட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்த அவர் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் மவுனமாக இருந்தார். பின்னர் மெல்ல ஆரம்பித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். இதனால் திமுக தரப்பிலிருந்து மாரிதாஸ் மீது விமர்சனம் எழுந்தது.

முதுகுளத்தூர் மணிகண்டன் விவகாரத்திலும் பதிவு
இந்நிலையில் கடந்த வாரம் மணி கண்டன் என்கிற கல்லூரி மாணவர் வாகனச்சோதனையில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் போலீஸார் விரட்டிப்பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின்னர் எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டுக்குச் சென்ற அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்ட நிலையில் உயிரிழந்தார்.
போலீஸ் தாக்கி உயிரிழந்தார் என சமூக வலைதலங்களில் தகவல் பரவியது. மணிகண்டனின் பெற்றோர் உறவினர்களும் அதேக்குற்றச்சாட்டை வைத்து உடலை வாங்க மறுத்தனர். ஆனால் போலீஸார் மணிகண்டனை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த அன்று ஸ்டேஷனில் நடந்த காட்சிகளின் சிசிடிவி பதிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

முப்படை தளபதி மரணத்துடன் இணைத்து ட்விட்டர்
இந்நிலையில் மணிகண்டன் மரணம் குறித்து ஊடகங்கள் மீதும் , காவல்துறை மீதும் மாரிதாஸ் குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார், இந்நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள் மறைவை சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக பதிவிடுவதை குறுப்பிட்டு திமுக, திகவினரில் சிலர் அவ்வாறு பதிவிடுவதாக குற்றம் சாட்டி மாரிதாஸ் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் காஷ்மீராக மாறுவதாக பதிவு
ஆனால் அதற்கு முன் தமிழகத்தை காஷ்மீருடன் ஒப்பிட்டு பிரிவினைவாத காஷ்மீர்போல் தமிழகம் மாறுகிறதா என்ற அடிப்படையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இது தமிழக அரசின் இறையான்மையை கேள்விக்குறியாக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவரும் நிலையில் இவ்வாறு பதிவிடுவது அவதூறு பரப்பிடும் செயல், சமூக ஒற்றுமையை சீரழிக்கும் செயல் என மதுரை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

4 பிரிவுகளில் வழக்குப்பதிவு கைது
இதையடுத்து மாரிதாஸ் அந்தப்பதிவை அழித்துவிட்டார், மதுரை மாநகர் திமுக தகவல்தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் மாரிதாஸ் மீது 153A, 504, 505(2), 505(1) (b) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மாரிதாஸை கைது செய்தனர்.

பாஜக திருப்பரங்குன்றம் சரவணன் வாக்குவாதம்
அவரை கைது செய்ய போலீஸார் மதுரையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றபோது அங்கு வந்த பாஜக பிரமுகர் சரவணன் உள்ளிட்டோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் மாரிதாஸை கைது செய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications