இரு எல்கேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! பள்ளி சூறை! பெற்றோர் ரயில் மறியல்! பதற்றத்தில் தானே!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானேவை அடுத்த பட்லாப்பூரில் இரு நர்சரி பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பட்லாப்பூரில் உள்ள பள்ளியில் 3 வயது, 4 வயது என இரு குழந்தைகள் எல்கேஜி படித்து வருகிறார்கள். இவர்களுக்கு அங்கு பணியாற்றும் ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர் கழிப்பறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இது போல் ஊழியரின் பாலியல் தொல்லை குறித்து இரு சிறுமிகளும் பெற்றோரிடம் கூறியிருந்தனர். இதையடுத்து அவர்களது புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அந்த நபரை போலீஸார் கடந்த 17 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், ஆசிரியை, பெண் உதவியாளர் ஆகியோருக்கும் பொறுப்பு இருக்கிறது என கூறி அவர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்ததாக திங்கள்கிழமை மாலை பள்ளி நிர்வாகம் அறிவித்தது. அது போல் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகமும் மன்னிப்பு கேட்டது. இந்த நிலையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பள்ளியின் வாயிலில் ஏராளமான பெற்றோர் திரண்டனர்.
#WATCH | Maharashtra | Protest underway at Badlapur Station against the alleged sexual assault incident with a girl child at a school in Badlapur pic.twitter.com/eMazZDliiU
— ANI (@ANI) August 20, 2024
மேலும் பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால் பட்லாபூரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டத்தை கைவிடுமாறும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை பெற செய்வோம் என உறுதியளித்தும் அவர்கள் கலைந்து போகவில்லை.
பாலியல் சம்பவத்தை கண்டித்து பட்லாப்பூரில் பல்வேறு நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர். உள்ளூர் எம்எல்ஏ கிசான் கத்தோரும் இந்த விவகாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications