போக்கிரி பட பாணியில்.. இளைஞரின் பாக்கெட்டில் போதைப்பொருள்.. சிக்கிய போலீஸ்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் போதைப் பொருள் சோதனையின்போது இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைத்து பொய் வழக்கு போட முயன்ற சம்பவத்தில் 4 போலீஸார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
தமிழ் திரையுலகில் விஜய் ரசிகர்களின் டாப் டென் பட லிஸ்டில் போக்கிரி படமும் இடம்பிடித்திருக்கும். போக்கிரி படத்தில் நடிகர் விஜய் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருவரும் கூடைப்பந்து மைதானத்தில் சந்திக்கும் காட்சி ஒன்று வரும். அப்போது, அந்த போலீஸ் ஆபிசர் விஜயின் பாக்கெட்டில் கஞ்சா வைத்துவிட்டு மிரட்டி இதைவெச்சு உன்னை என்ன பன்றேன் பாரு.. என்று கூறுவார். இந்தக் காட்சி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அதே பாணியில் ஒரு பகீர் சம்பவம் உண்மையாகவே மும்பையில் நடந்துள்ளது. இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் போதைப் பொருள் வைத்துவிட்டு பொய் வழக்கு போட முயன்ற 4 போலீஸ் ஆபிசர்கள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி மூலமாக சிக்கியுள்ளனர். இதையடுத்து, அந்த 4 போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதையடுத்து, அந்த 4 போலீஸும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், மும்பை இளைஞர் ஒருவரைப் பிடித்து இரண்டு போலீஸார் சோதனை செய்கின்றனர். அப்பகுதியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இரண்டு போலீஸார் நிற்கின்றனர். சோதனை செய்து கொண்டிருந்தபோது, திடீரென போலீஸ் ஒருவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த போதைப் பொருளை கையில் எடுக்கிறார்.
பின்னர், அந்த நபருக்கே தெரியாமல் அந்த இளைஞரின் பின் பாக்கெட்டுக்குள் போதைப்பொருளை எடுத்துவைக்கிறார். இதையடுத்து, பாக்கெட்டில் இருந்து போதைப் பொருளை எடுப்பது போல நடித்துள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர் 20 கிராம் மெபெட்ரோன் வைத்திருப்பதாகக் கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோதுதான் போலீஸாரின் இந்த நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளைஞரிடம் சோதனை நடத்திய போலீஸார் மும்பை, கர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 4 போலீஸாரையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து காவல் துணை ஆணையர் (மண்டலம் 11) ராஜ்திலக் கூறுகையில், இச்சம்பவத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல் துறையினர் சோதனை செய்த நபர் டேனியல் என்பது தெரியவந்துள்ளது. கர் காவல் நிலையத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு காவலர்கள் ஆவர்.
இவர்கள் கலினா பகுதியில் டேனியலை என்பவரைப் பிடித்து வெள்ளிக்கிழமை மாலை சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த காவலர்கள் டேனியல் மீது பொய் வழக்குப் பதிவு செய்ய முயன்றது சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட டேனியல் கூறுகையில், காவல் துறையினர் என்னை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைப்பதற்காக முதலில் என்னை மிரட்டினர். இதைத்தொடர்ந்து, அவர்களின் இந்த செயல் சிசிடிவி கேமராவில் பதிவாகியதை தெரிந்து கொண்ட பின்னர் என்னை விட்டுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications